×

திருவண்ணாமலை கோயிலுக்குள் கத்தியுடன் நுழைந்து பொருட்களை சூறையாடிய பெங்களூரு வாலிபர்: காதலியிடமும் விசாரணை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தெற்கு கோபுரம் எனப்படும் திருமஞ்சன கோபுரம் வழியாக நேற்று கோயிலுக்குள் ஒரு இளம்பெண்ணுடன் வந்த வாலிபர், சிறிது நேரம் அங்கும் இங்குமாக சுற்றித்திரிந்தார். போதையில் இருந்த அந்த வாலிபரின் கையில் கத்தி இருந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். திடீரென கோயில் 4ம் பிரகாரத்தில் உள்ள இணை ஆணையரின் நிர்வாக அலுவலகத்துக்குள் நுழைந்து ரகளையில் ஈடுபட்டார். அலுவலக கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார், இணை ஆணையரின் இருக்கையில் அமர்ந்து கொண்டார். பிடிக்க முயன்ற ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டியபடி அருகில் உள்ள அர்ச்சகர் பயிற்சி பள்ளி கட்டிடத்துக்குள் நுழைந்தார். அங்கிருந்த சுவரின் மீது ஏறி, பயிற்சி பள்ளியின் மேற்கூரையை உடைந்து உள்ளே குதித்து, பொருட்களை சேதப்படுத்தினார்.

போலீசார் ஊழியர்கள் உதவியடன் அந்த வாலிபரை பிடித்து சரமாரியாக தாக்கினர். பின்னர், கைகளையும், கால்களையும் கட்டினர். விசாரணையில், பெங்களூரு காவல்பைசந்திரா தொட்டா நகரைச் சேர்ந்த பிரேம்குமார் மகன் பிரத்தம்(23) என்பது தெரியவந்தது. உடன் வந்த இளம்பெண் அவரது காதலியான பெங்களூருவை சேர்ந்த ஜெனிபர்(21) என்பதும் தெரிய வந்தது. ஜெனிபரிடம் நடத்திய விசாரணையில், ‘பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு பைக்கில் வரும் வழியில், இரண்டு பைக்கிலும், ஒரு காரிலும் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத சிலர், எங்களை தாக்க முயன்றனர்.

மயக்க மருந்து போன்ற ஸ்பிரே அடித்தனர். அவர்களிடம் இருந்து தப்பிக்கவே கோயிலுக்குள் வந்தோம்’ என்றார். ஆனால், அவர் முன்னுக்குப்பின் முரணாக தெரிவித்த பதில் போலீசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே, இருவரும் தெரிவித்த முகவரிக்கு நேரில் சென்று விசாரிக்க ேபாலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும், இது தொடர்பாக, கோயில் நிர்வாகம் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், வாலிபர் பிரத்தத்தை கைது செய்தனர். அவரது உடலில் காயங்கள் இருப்பதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags : Thiruvannamalai temple , Bengaluru youth who entered Tiruvannamalai temple with a knife and looted things: Interrogation with girlfriend too
× RELATED திருவண்ணாமலை சென்ற சென்னை பக்தர் திடீர் மரணம்