நாடாளுமன்றம் முடக்க விவகாரம் ராகுலை பேச விடுங்க.. அப்புறம் இத பேசலாம்.. ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் நிபந்தனை

புதுடெல்லி: நாடாளுமன்றம் முடக்கப்பட்ட விவகாரத்தில் ராகுலை பேச அனுமதிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் நிபந்தனை விதித்து உள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு அமளி காரணமாக ஒருநாள் கூட அவை நடக்கவில்லை. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரிக்கையை எதிர்க்கட்சிகள் திரும்ப பெற்றால், லண்டன் பேச்சுக்கு ராகுல் மன்னிப்பு கேட்கும் கோரிக்கையை கைவிடுவதாகவும் ஒன்றிய அரசு சார்பில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இது எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த இரண்டு விஷயங்களும் முற்றிலும் தொடர்பில்லாதவை. ஒன்று நிஜம். நாங்கள் கேட்கும் கேள்விகள் அடிப்படைக் கேள்விகள்.

அதானி முறைகேடு நடந்த ஒன்று. ஆனால் ராகுல் விவகாரத்தில் பாஜ மன்னிப்புக் கோருவது ஆதாரமற்றது, பொய்யான குற்றச்சாட்டுகள். எனவே உங்கள் பேரம் எதற்கும் நாங்கள் தயாராக இல்லை. இருப்பினும் அரசிடம் இருந்து யாரும் எதிர்க்கட்சிகளுடன் நேரடியாகப் பேசவில்லை என்றாலும், அதிகாரப்பூர்வமற்ற முறையில் இது மட்டுமே தெரியும். மக்களவை விதி எண் 357ன் கீழ் பேச அனுமதிக்குமாறு சபாநாயகருக்கு ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார். இது அவரது ஜனநாயக உரிமை. ஆனால் சபாநாயகர் என்ன முடிவெடுப்பார் என்பதை காலம்தான் சொல்லும். அவர்கள் ராகுல் விவகாரத்தை எழுப்புவது, அதானி விவகாரத்தில் இருந்து கவனத்தை திசை திருப்பும் நடவடிக்கைதான்.

எனவே நாடாளுமன்றம் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்பதில் அரசு தீவிரம் காட்டினால், மக்களவையில் ராகுல் பேச அனுமதிக்கப்பட வேண்டும். மூத்த அமைச்சர்கள் அவர் மீது சுமத்திய அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை மறுக்க அவரை அனுமதியுங்கள். பின்னர் அவை செயல்படும். இந்த தொடர் முழுவதும் முடங்குவதும், முடங்காமல் இருப்பதும் அரசின் கையில் தான் இருக்கிறது. அவர்கள் பேச விரும்புகிறார்கள். ஆனால் ராகுலை அவையில் பேச அனுமதிக்காமல் நாங்கள் பேச தயாரில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: