சூரத்: பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள தொலைக்காட்சிக்கு கடந்த 20ம் தேதி மர்ம நபரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர், அடுத்த 36 மணி நேரத்தில் முதல்வர் நிதிஷ்குமாரை வெடிகுண்டு வைத்து கொல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில் மர்மநபர் குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து அழைத்து பேசியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பாட்னா போலீசார் சூரத் போலீசாரின் உதவியை நாடினார்கள். இறுதியில் மிரட்டல் விடுத்த நபர் பீகாரை சேர்ந்த அங்கித் மிஸ்ரா என்பது தெரியவந்தது. சூரத் போலீசார் அவரை கைது செய்த பாட்னா போலீசாரிடம் ஒப்படைத்தனர். அங்கித் மிஸ்ரா(20) சூரத்தின் லஸ்கானாவில் உள்ள விசைத்தறி கூடத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக வேலை செய்து வந்துள்ளார். எதற்காக அவர் முதல்வருக்கு மிரட்டல் விடுத்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
