×

நாகர்கோவிலில் பரோட்டா கடை உரிமையாளரை தற்கொலைக்கு தூண்டியதாக பாஜக நிர்வாகி ரமேஷ் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு

நாகர்கோவில்: நாகர்கோவிலில் பரோட்டா கடை உரிமையாளரை தற்கொலைக்கு தூண்டியதாக பாஜக நிர்வாகி ரமேஷ் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாகர்கோவிலை சேர்ந்த பரோட்டா கடை உரிமையாளர் ராதாகிருஷ்ணன் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தனது சாவுக்கு பாஜக நிர்வாகி உள்ளிட்ட 5 பேர் தான் காரணம் என ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதி வைத்திருந்தார்.

நாகர்கோவில் இருளப்பபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(35). இவர் குத்தாலம் மெயின் ரோட்டில் ஓட்டல் நடத்தி வந்துள்ளார். இவர் நேற்றிரவு அந்த ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த சுசீந்திரம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து ராதாகிருஷ்ணனின் தாயார் நாடாச்சிசங்கம் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரில் எனக்கு 5 மகள்கள் மற்றும் மகன் (ராதாகிருஷ்ணன்) ஆகியோர் உள்ளனர். ராதாகிருஷ்ணன் தனது 5 சகோதரிகளையும் திருமணம் செய்து கொடுத்துவிட்டு தான் திருமணம் செய்யாமல் இருந்து வந்தார். எனது மகன் கடனை அடைக்க குடும்ப சொத்தை விற்றார். அப்போது எனது கணவரின் உறவினர்கள் அதனை விற்க விடாமல் நீதிமன்றத்தை அணுகினர். சொத்தை விற்று பணம் கொடுப்பதாக கூறியும் அவர்கள் உடன்படவில்லை. எனது மகனை அவர்கள் தொடர்ந்து மிரட்டியுள்ளனர். இதனால் எனது மகன் தற்கொலை செய்து கொண்டான் என்று ராதாகிருஷ்ணனின் தாயார் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்தனர். மேலும் ராதாகிருஷ்ணன் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னதாக எழுதிய கடிதத்தை அவரது தாயார் சுசீந்திரம் காவல் நிலையத்தில் அளித்துள்ளார்.

அந்த கடிதத்தில், எனது சாவுக்கு காரணமானவர்கள் வழக்கறிஞர்கள் ரமேஷ், பிரபு, பாலாஜி, பாஸ்கர், கண்ணன், ஆகிய 5 பேரின் பெயரை குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படியில், அந்த 5 பேர் மீது சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் ரமேஷ் பாரதிய ஜனதா கட்சியின் ராஜகாமங்கலம் கிழக்கு ஒன்றிய பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். இதனிடையே ராதாகிருஷ்ணன் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : BJP ,Ramesh ,Nagercoil , In Nagercoil, Parotta shop owner committed suicide, BJP leader Ramesh, police registered a case
× RELATED அண்ணாமலை மீது வழக்கு