×

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆட இந்திய அணி பாகிஸ்தான் வர அனுமதி கொடுங்கள்: மோடிக்கு அப்ரிடி கோரிக்கை

லாகூர்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்காக இந்திய வீரர்கள், பாகிஸ்தானுக்கு வருவதற்கு அனுமதிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி கோரிக்கை விடுத்துள்ளார். ஆசிய கோப்பை தொடரை நடத்தும் உரிமையை  இந்தமுறை பாகிஸ்தான் பெற்றுள்ளது. செப்டம்பரில் இந்த தொடர்  நடத்தப்பட உள்ளது. ஆனால் அங்கு இந்திய அணி செல்லாது, போட்டி வேறு இடத்திற்கு மாற்றப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறினார். ஆனால் பாகிஸ்தானுக்கு இந்தியா வரவில்லை என்றால், இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பைக்கு பாகிஸ்தான் வராது என அந்நாட்டு வாரியம் முதலில் மிரட்டியது.

ஆனால் தற்போது இந்தியா பங்கேற்கும் போட்டிகளை மட்டும் துபாயில் நடத்த பாக். கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள்கேப்டன் சாகித் அப்ரிடி அளித்துள்ள பேட்டியில், இரு நாட்டு அணிகளும் விளையாட பிரதமர் மோடி அனுமதிக்க வேண்டும். பாகிஸ்தானில் தற்போது எந்தவித அச்சுறுத்தலும் கிடையாது.  பல நாட்டு அணிகளும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றன. ஒருமுறை இந்திய ரசிகர் ஒருவர் பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவுக்கு வரக்கூடாது,என மிரட்டல் விடுத்தார். ஆனால் அதனையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் பாகிஸ்தான் அரசு எங்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது.

எனவே மிரட்டல்கள் வந்துக்கொண்டே தான் இருக்கும். இரு நாட்டு அணிகளின் ஒற்றுமைக்காக போட்டியை நடத்தவிட வேண்டும். இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்கு வந்தால், சிறப்பான மரியாதையுடன் வரவேற்போம். அவர்களை பாதுகாப்பாக பார்த்துக்கொள்வோம். இந்த தலைமுறையினர் சண்டை, போர்களை விரும்புவதில்லை. இந்தியாவுடன் விளையாடும் போதெல்லாம் பெரும் மகிழ்ச்சியுடன் ஆடுகிறோம்.  2005 இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரும்போது ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் ஆகியோர் பல கடைகளுக்கும் ஷாப்பிங் சென்றனர். உணவகங்களுக்கு சென்றனர். ஆனால் யாருமே அவர்களிடம் பணம் வாங்கவில்லை. இந்திய வீரர்கள் மீது அவ்வளவு அன்பு வைத்துள்ளனர் என கூறியுள்ளார்.

Tags : Pakistan ,Asia Cup cricket ,Afridi ,Modi , Allow Indian team to come to Pakistan to play in Asia Cup cricket series: Afridi requests Modi
× RELATED பயங்கரவாதம் சப்ளை செய்த பாகிஸ்தான்...