×

தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க கல்வட்டங்களை தீவிரமாக ஆய்வு செய்யும் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம்

உடுமலை :  தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கும் வகையில், உடுமலை பகுதியில் கல்வட்டங்களை  ஆய்வு செய்து ஆவணப்படுத்தும் பணியில் கல்லூரி மாணவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.உடுமலை மெட்ராத்தி பகுதிகளில் பெருங்கற்கால சின்னங்கள் ஏராளமாக இருந்தன. இவை நாளுக்கு நாள் ஒவ்வொன்றாக குறைந்து வருவதையும், அழிந்து வருவதையும் கண்முன் காண முடிகிறது.  1960ம் ஆண்டு மத்திய அரசின் தொல்லியல் ஆவணங்களில் 125க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் இருந்த பகுதியில் தற்போது 42 கல் வட்டங்களே உள்ளன. கடந்த  2018- 19 காலகட்டங்களில் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில்  ஆவணப்படுத்திய போது 80க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் இருந்தது. ஆனால் தற்போது  42 கல்வட்டங்களே உள்ளன.

இதிலும் முழுமையாக 25 கல் வட்டங்களும்,  சிதிலமடைந்த நிலையில் 17 கல்வட்டங்களும் இருக்கிறது.இதுகுறித்து ஏற்கனவே தமிழ்நாடு அரசு தொல்லியல் துறைக்கு உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் உரிய சான்றுகளுடன்  விண்ணப்பம் அளிக்கப்பட்டது. தென்கொங்கு பகுதி பெருங்கற்கால பகுதி என்பதையும்,  இராசகேசரி பெருவழி போன்றே கொங்கப்பெருவழி, வீர நாராயணப்பெருவழி, சோழமாதேவி பெருவழி போன்ற பெருவழிகள் இருந்த வழித்தடத்தில் கொங்கப்பெருவழி என்னும் குரும்பபாளையம் முதல் கருவூர் வரை செல்லும் பெருவழியில் அமைந்தது இப்பகுதி. இதற்கு சான்றாக உரம்பூர் பகுதியில் 15 அடி நெடுங்கல்லும்,  சோமவாரப்பட்டி கொங்கல் நகரம் பகுதியில்  18 அடி நெடுங்கல்லும் இன்றும் சநிற்கிறது.

அதேபோல மெட்ராத்தி  ஊருக்கு வடக்கே காட்டுப்பகுதியில்  125க்கும் மேற்பட்ட  12-க்கு 12, 10-க்கு 10 மற்றும் 6-க்கு 6 என்னும் அளவுகளில் கல்வட்டங்கள் இருந்தன. உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் பதிவுகளில் இதனை பார்த்த தொல்லியல் துறையில் படிக்கும்  கேரளபாளையம் செயிண்ட் தாமஸ் கல்லூரி மாணவர்கள் நேரில் பார்த்து ஆய்வு செய்து ஆவணப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு கல்வட்டங்களின் உள்வட்ட அளவையும், வெளி வட்ட அளவையும் பெருங்கற்களின்  உயரம் மற்றும் அகலங்களின் அளவினையும் ஆராய்ந்து ஆவணப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இதை மயானக்காடு என்று அழைத்தனர் எனவும், தற்போது அது வழக்கொழிந்து வருவதாகவும், ஏராளமாக பெரிய பெரிய கற்கள் இருந்தது தற்போது காலப்போக்கில் ஒவ்வொன்றாக அழிந்து வருவதையும் குறிப்பிட்டு சொல்கின்றனர். மத்திய, மாநில அரசுகளின் தொல்லியல் துறை கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டும்  இவ்வாறான வரலாற்று சின்னங்கள் அழிந்து வருவது வரலாற்று ஆய்வாளர்களுக்கு மிகுந்த வேதனையை உண்டாக்கி உள்ளது.

இந்நிலையில், செயிண்ட் தாமஸ் கல்லூரி வரலாறு, தொல்லியல் துறை சார்ந்த எபி டேவிட், சுபப்பிரியன் ஆகியோர் ஆய்வு உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் உதவியுடன் ஆவணப்படுத்தினர். அதற்கு முன்னதாக மெட்ராத்தி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலரிடம் தெரிவிக்கப்பட்டு அவர்களும் ஆய்வுப்பணிக்கு முழுமையாக ஒத்துழைப்பு நல்கியது குறிப்பிடத்தக்கது.


Tags : Udumalai , Udumalai : In order to preserve the archaeological monuments, the college is in the process of surveying and documenting the stone carvings in the Udumalai area.
× RELATED பொள்ளாச்சி, உடுமலை வழியாக கோவை-சென்னை...