×

கடந்த 50 ஆண்டுகளாக குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா வழங்க கோரி கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்-ஆர்டிஓ அலுவலகத்தில் திரண்டனர்

திருவண்ணாமலை : கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா வழங்கக்கோரி திருவண்ணாமலை ஆர்டிஓ அலுவலகத்தில் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருவண்ணாமலை அடுத்த நவம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட இருதயபுரம் கிராமத்தில், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக 126 குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆனால், அவர்களுடைய வீடுகளுக்கு பட்டா வழங்கவில்லை. இது ெதாடர்பாக, பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். ஆனாலும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

எனவே, இருதயபுரம் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று திருவண்ணாமலை ஆர்டிஓ அலுவலகத்தில் திரண்டனர். அங்கு, கோரிக்கை மனுக்களுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை கலைந்துச்செல்ல மாட்டோம் என தெரிவித்தனர். அதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருக்கும் வீடுகளுக்கு, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் அட்டை என அனைத்து ஆவணங்களையும் வைத்திருந்தும், வீட்டு மனைப்பட்டா வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழிப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து, அங்கிருந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அப்போது, அவ்வித நீர்நிலைப் பகுதியில் அல்லாத இடத்தில், வருவாய்த்துறையால் சட்டவிதிமுறைக்கு உட்பட்டு எளிதில் பட்டா வழங்க தகுதியுள்ள இடத்தில் வசிப்போரை ஆண்டுக்கணக்கில் அலைக்கழிப்பதால் போராட்டத்தில் ஈடுபடும் நிலை ஏற்பட்டதாக பொதுமக்கள் தரப்பில் தெரிவித்தனர்.

மேலும், உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்து, அங்கிருந்து கலைந்து சென்றனர். இதேபோல், அய்யம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட சின்ன பாலிப்பட்டு கிராமத்தை சேர்ந்த 12 பேர் வீட்டுமனை பட்டா கேட்டு தாலுகா அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.

Tags : RTO , Thiruvannamalai: Village in Thiruvannamalai RTO office to issue title to houses occupied for more than 50 years.
× RELATED அனைத்து பஸ்கள் நின்று செல்ல ஆர்டிஓ உத்தரவு