×

ஆதார் எண் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்புக்கான கால அவகாசம் அடுத்தாண்டு மார்ச் 31 வரை நீட்டிப்பு

டெல்லி: ஆதார் எண் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்புக்கான கால அவகாசம் அடுத்தாண்டு மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய தேர்தல் விதிகள் திருத்த சட்டம் 2021ன் படி, ஆதார் எண்ணுடன் வாக்காளர் தகவல்களை இணைக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை கடந்த 2021 ஆகஸ்ட் 1-ம் தேதி துவங்கி வரும் 2023 ஆண்டு மார்ச் 3-ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்களிடம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனை அடுத்து தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை இணைத்து வந்தனர். வாக்காளர்கள், தங்களது ஆதார் எண் விபரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க https://WWW.nvsp.in, https://votersportal.eci.gov.in ஆகிய இணையதள முகவரி மூலமாகவும், வோட்டர்ஸ் ஹெல்ப்லைன் மொபைல் ஆப் போன்ற செயலி வழியாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.

தவிர, ஆதார் எண் விவரத்தை வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஆகியோரிடம் அளித்து வாக்காளர் பட்டியலுடன் இணைத்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வரும் 31ம் தேதியுடன் கால அவகாசம் முடிய இருந்த நிலையில், மேலும் ஓராண்டு நீட்டிப்பு செய்து சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.


Tags : Deadline for Aadhaar Number-Voter ID Card linking extended till March 31 next year
× RELATED வலுக்கும் எதிர்ப்பு!: இ-பாஸ் முறையை...