×

உக்ரைனுக்கு 16 பில்லியன் டாலர்கள் நிதியுதவி, பீரங்கிகளை வழங்கிய மேற்கு உலக நாடுகளுக்கு ரஷ்யா, சீனா கூட்டாக கண்டனம்!!

பெய்ஜிங் : ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனுக்கு 16 பில்லியன் டாலர்கள் நிதி உதவி மற்றும் பீரங்கிகளை வழங்கிய மேற்கு உலக நாடுகளை சீன அதிபர் ஸி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் கூட்டாக விமர்சித்துள்ளனர். 3வது முறையாக சீனாவின் அதிபராக அண்மையில் பதவியேற்றுக் கொண்ட ஸி ஜின்பிங் தனது முதல் நாட்டு பயணமாக ரஷ்யாவுக்கு சென்றுள்ளார். அரசினர் மாளிகையில் நடைபெற்ற இரு அதிபர்களின் சந்திப்பில் இரு நாடுகளும் பரஸ்பரம் , பொருளாதார ஒத்துழைப்பை நல்க உறுதி தெரிவித்தனர்.

இதையடுத்து இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், மேற்கு உலக நாடுகளை குறிப்பாக உலக சமநிலையை குலைக்கும் அமெரிக்கா மற்றும் ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் மூக்கை நுழைக்கும் நேட்டோ அமைப்புகளுக்கு எதிராக குற்றச் சாட்டுகளை வைத்தனர். உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவை தனிமைப்படுத்த மேற்கு உலகம் துடிப்பதாகவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் இருந்து புதினை கைது வாரண்ட் பெற்றுள்ளதோடு, ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளதற்கு எதிர்ப்பை பதிவு செய்தனர்.

தொடர்ந்து உக்ரைனில் அமைதி திரும்ப, சீன அதிபர் முன்னெடுத்த அமைதி பேச்சுவார்த்தைக்கு பாராட்டு தெரிவித்த புதின், உக்ரைன் மற்றும் மேற்கு உலக நாடுகளே அதனை ஏற்க மறுத்ததாக கூறினார். உக்ரைன் விவகாரத்தில் சீனாவுக்கு எந்த சார்பும் இல்லை என்பதை சீன அதிபர் ஸி ஜின்பிங் குறிப்பிட்டார். இந்த நிலையில் உக்ரைன் தொடர்பாக எந்த சார்பும் இல்லை என்பதை சீன கூறியது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க வெள்ளை மாளிகை, உண்மையில் சீனா நடுநிலைமையை கடைபிடிக்குமேயானால் உக்ரைனில் இருந்து போரை திரும்பப் பெற ரஷ்யாவுக்கு சீனா அழுத்தம் தர வேண்டும் என்று கூறியுள்ளது. 


Tags : Russia ,China ,Ukraine , Ukraine, dollars, funding, artillery, Russia, China
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...