புழல்: சென்னையில், கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையின் காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது என, பொதுப்பணிதுறை அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர்நிலைகளில் புழல் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் தற்போது 2,544 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்பட்டு வந்த நீர் கடந்த பிப்ரவரி மாதத்துடன் நிறுத்தப்பட்டதால் புழல் ஏரிக்கு நீர்வரத்து இல்லாமல் இருந்தது.
இந்தநிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக புழல் ஏரிக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. தற்போது புழல் ஏரிக்கு வினாடிக்கு 202 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இந்த ஏரியில் இருந்து சென்னை குடிநீர் தேவைக்காக 159 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது என, பொதுப்பணிதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.