×

தீவிரவாத வழக்குகள் உள்பட இம்ரான் கானுக்கு 3 வழக்குகளில் ஜாமீன்: லாகூர் உயர்நீதிமன்றம் வழங்கியது

லாகூர்: பாகிஸ்தானில் இம்ரான் கானுக்கு 3 வழக்குகளில் ஜாமீன் வழங்கி லாகூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது தற்போதைய ஆளும் அரசு கடந்த 11 மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்துள்ளது.  இதில் தோஷகானா பரிசு பொருள் வழக்கு மற்றும் பெண் நீதிபதியை மிரட்டிய வழக்குகளில் இம்ரான் நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகததால் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.  இதில் போலீசாருக்கும், தொண்டர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக பிடிஐ கட்சி தொண்டர்கள் 500 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், லாகூர் உயர்நீதிமன்றத்தில் இம்ரான் நேற்று ஆஜரானார். அப்போது இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகத்தில் வன்முறையில் ஈடுபட்டது தொடர்பான தீவிரவாத வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் இம்ரானுக்கு வரும் 27ம் தேதி வரை பாதுகாப்பு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.  அதே போல், லாகூர் உயர் நீதிமன்றத்தில் தோஷகானா வழக்கிலும் இம்ரான் நேற்று ஆஜரானார். இதில் வரும் 28ம் தேதி வரை அவரை கைது செய்ய தடை விதித்து, பாதுகாப்பு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

* தீர்ப்பு ஒத்திவைப்பு இம்ரான் மீதான தீவிரவாத வழக்குகளில் ஒன்றை இஸ்லாமாபாத் தீவிரவாத ஒழிப்பு நீதிமன்றம் நேற்று விசாரித்தது. அப்போது, இம்ரான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சர்தார் மஸ்ரூப் கான், ‘’நீதிமன்றத்துக்கு வந்தால் இம்ரான் கொல்லப்படுதவற்கு வாய்ப்புள்ளது. இஸ்லாமாபாத் உயர்நீமன்ற வளாகத்தில் நடந்ததை நாடே பார்த்தது. எனவே, இந்த வழக்கில் அவர் நேரில் ஆஜராவதில் இருந்து இன்று (நேற்று) விலக்கு அளிக்க வேண்டும்,’’ என்று கோரினார். இதை கேட்ட நீதிபதி, ‘’நாடு பார்த்தது. ஆனால் கேபிள் செயல்படவில்லை என்பதால் நீதிமன்றம் பார்க்க முடியவில்லை,’’ என்று கூறி, இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.



Tags : Imran Khan ,Lahore High Court , Imran Khan granted bail in 3 cases including terror cases: Lahore High Court
× RELATED சிறையில் உள்ள இம்ரானுடன் மனைவி சந்திப்பு