×

பொன்னேரியில் புதிதாக போடப்பட்ட சாலை 2 நாளில் சேதம்: ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பொன்னேரி: பொன்னேரியில் நீண்ட நாட்களுக்குப்பின் புதிதாக போடப்பட்ட சாலை 2 நாளில் சேதமானதையடுத்து, ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளால் நகர் முழுவதும் உள்ள சாலைகள் சேதமடைந்துள்ளன. ஒரு சில வார்டுகளில் பாதாள சாக்கடை பணிகள் முடிவுற்று, சாலை அமைக்கப்பட்டு வருகின்றன. பொன்னேரியில் இருந்து ரெட்டிப்பாளையம் செல்லும் சாலையில் பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற பாதாள சாக்கடை பணிகளால் கடந்த ஓராண்டாக பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.

கடந்த ஓராண்டாக மந்த கதியில் நடைபெற்று வந்த பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்குமாறு சுமார் 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பொன்னேரி நகராட்சி அலுவலகத்தை கடந்த வாரம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் விரைந்து சாலையை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பொன்னேரி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் தர்ணா போராட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டனர். ஆலாடு, மனோபுரம், ரெட்டிப்பாளையம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்களின் தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து பாதாள சாக்கடை முடிவுற்று கடந்த சில நாட்களுக்கு முன் தார் சாலை அமைக்கப்பட்டது.

இந்தநிலையில் புதிதாக போடப்பட்ட தார்சாலை 2 நாளில் சேதமடைந்து ஆங்காங்கே சுமார் 1 அடிக்கு உள்வாங்கியுள்ளது. மேலும் பல இடங்களில் சாலையில் விரிசல் ஏற்பட்டும், சேதமடைந்தும் உள்ளது. இதனால் இந்த சாலை போக்குவரத்திற்கு உகந்த சாலையில்லை என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஏற்கனவே ஓராண்டாக பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள், விவசாயிகள், நோயாளிகள் மிகுந்த சிரமத்துடன் சொந்த வாகனங்களிலும், நடந்தும் சென்று வந்த நிலையில், தற்போது அமைக்கப்பட்ட சாலையும் தரமற்று இருப்பதால் ஒப்பந்ததாரர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சாலையை மீண்டும் சீரமைத்து பொதுமக்கள் பயன்படுத்த வழிவகை செய்யவேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Ponneri , Damage to newly laid road in Ponneri on 2nd day: Request action on contractor
× RELATED பொன்னேரி அருகே கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு