உலக வன தினத்தை முன்னிட்டு அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா: டிஐஜி, எஸ்பி பங்கேற்பு

காஞ்சிபுரம்: உலக வன தினத்தை முன்னிட்டு, முசரவாக்கம் அரசு பள்ளியில் நடந்த மரக்கன்று நடும் விழாவில், டிஐஜி பகலவன், எஸ்பி சுதாகர் ஆகியோர் பங்கேற்றனர். காஞ்சிபுரத்தை அடுத்த முசரவாக்கம் அரசு மேல்நிலை பள்ளியில் உலக வன தினத்தை முன்னிட்டு மாவட்ட வனத்துறை சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வனச்சரகர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். முசரவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஜெய்சங்கர் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக காஞ்சிபுரம் சரக டிஐஜி பகலவன், மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர் ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்று நடும் விழாவை தொடங்கி வைத்தனர்.

இதனை தொடர்ந்து மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வனப்பாதுகாப்பு சம்பந்தமான உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்களுக்கு காடுகளினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், மரம் வளர்ப்பதன் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தனர். விழாவில், ஒன்றியக்குழு தலைவர் மலர்க்கொடிகுமார், ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகா ரவி மற்றும் காவல்துறை, வனத்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.

Related Stories: