×

பிள்ளைப்பாக்கம் - மணிமங்கலம் சாலை விரிவாக்கப் பணி விபத்துகளை தடுக்க எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை

ஸ்ரீபெரும்புதூர்: சென்னை - பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையையும், சென்னை - திருச்சி ஜிஎஸ்டி சாலையை இணைக்கும் சாலையாக ஸ்ரீபெரும்புதூர் - தாம்பரம் சாலை உள்ளது. ஸ்ரீபெரும்புதூர், கட்சிப்பட்டு, பிள்ளைப்பாக்கம், நாவலூர், கொளத்தூர், மலைப்பட்டு, சேத்துப்பட்டு, புஷ்பகிரி, மணிமங்கலம், முடிச்சூர், பெருங்களத்தூர் வழியாக தாம்பரம் ஜிஎஸ்டி சாலையை இணைக்கிறது. மேற்கண்ட பகுதியை சார்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகள் மற்றும் தொழிற்சாலை ஊழியர்கள் என தினமும் 1500க்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர்.

தற்போது, தாம்பரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை (தடம் எண் 583சி, 583டி) மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், இந்த சாலையில் நாளுக்குநாள் போக்குவரத்து அதிகரித்து வருவதால், வாகன நெரிசலும், அடிக்கடி விபத்தும் நடப்பதால், இரு வழிச்சாலையான இந்த சாலையை நான்கு வழி சாலையாக அகலப்படுத்த நெடுஞ்சாலை துறை சார்பில் திட்டமிடப்பட்டது. அதன் அடிப்படையில், முதல் கட்டமாக ஸ்ரீபெரும்புதூரில் இருந்து பிள்ளைபாக்கம் வரை 3.5 கிலோ மீட்டர் சாலையை 4 வழி சாலையாக 3 ஆண்டுகளுக்கு முன்பு அகலப்படுத்தபட்டது.

தற்போது, இரண்டாம் கட்டமாக பிள்ளைப்பாக்கம் முதல் மணிமங்கலம் வரை 8.4 கிலோமீட்டர் நீளத்திற்கு அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.  நாவலூர் முதல் மணிமங்கலம் வரை இருபுறமும் சாலையின் ஓரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றபட்டு கால்வாய், பாலம் அமைக்கும் பணி  நடைபெற்று வருகிறது. மேலும், தரை பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றனர். சாலை அமைக்க இருபுறமும் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. பள்ளம் தோண்டப்பட்டதற்கு எச்சரிக்கை பலகை வைக்கப்படவில்லை.  மேலும், பாலம் அமைக்கும் இடங்களில் எச்சரிக்கை பலகை, ரிப்லெக்டர் ஸ்டிக்கர் போன்ற எவ்வித  எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், இரவில் செல்லும் வாகன ஓட்டிகள் பாலத்திற்கு தோண்டப்பட்டுள்ள பள்ளங்களில் விழுந்து காயமடைந்து வருகின்றனர். மேலும், தினமும் கார், லாரி போன்ற வாகனங்கள் பள்ளத்தில் சிக்கி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. கடந்த 2 மாதத்தில் 5 விபத்துக்கள் நடந்துள்ளன. இதில், ஒருவர் பலியாகி உள்ளார். இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் கொடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சாலை பணி நடைபெறும் இடங்களில் எச்சரிக்கை பலகை மற்றும் ரிப்லெக்டர் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Pillipakkam ,Manimangalam , Pillipakkam-Manimangalam road widening work should be put up warning sign to prevent accidents: demand of motorists
× RELATED ரூ.11 கோடி மதிப்பீட்டில் அடையாறு...