ஸ்ரீபெரும்புதூர்: தாம்பரம், பல்லாவரம் கூட்டு குடிநீர் பைப்புகள் உடைந்து, சாலையில் தண்ணீர் ஆறாக ஓடுகிறது. இது குறித்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், மேலச்சேரி, பழையசீவரம், வெங்குடி ஆகிய மூன்று இடங்களில் திறந்தவெளி கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு அமைத்து பல்லாவரம், தாம்பரம் நகர மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யபட்டு வருகின்றனர். இதற்காக, பழையசீவரம் பகுதியில் இருந்து வாலாஜாபாத், ஒரகடம், படப்பை, மண்ணிவாக்கம் வழியாக பைப் லைன் புதைத்து, தாம்பரம் மற்றும் பல்லாவரம் பகுதி மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது, தாம்பரம் அருகே பனப்பாக்கம், செரப்பணஞ்சேரி, படப்பை ஆகிய பகுதிகளில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பைப்புகளில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாக வெளியேறி வருகின்றது. இதுகுறித்து, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் கொடுத்தும், இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர். இதனால், நாள் ஒன்றுக்கு பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், தாம்பரம், பல்லாவரம் கூட்டு குடிநீர் திட்ட பைப்புகளில் 4 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாக வெளியேறி வருகின்றன. தற்போது கோடைக்காலம் துவங்கி உள்ளதால் குடிநீர் பற்றாகுறை அதிகரிக்கும் சூழல் உள்ளது. இதனை, கருத்தில் கொண்டு குடிநீர் பைப்புகளில் ஏற்பட்டுள்ள உடைப்பினை சரிசெய்து தண்ணீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு, இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.