சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைமுறைகளை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்த வழக்கு விடுமுறை தினமான இன்று விசாரணைக்கு வரவுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி ஓ.பன்னீசெல்வம் ஆதரவு எம்எல்ஏக்கள் மனோஜ்பாண்டியன், வைத்தியலிங்கம் மற்றும் ஜேசிடி பிரபாகர் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி குமரேஷ்பாபு முன்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது தொடர்பான தீர்மானத்தையும் எதிர்த்துள்ளதால் அந்த வழக்குகளை மார்ச் 22ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறேன்.
தேர்தல் நடைமுறைகளை தொடரலாம், தீர்மானத்தை எதிர்த்த வழக்குகளில் தீர்ப்பளிக்கும் வரை தேர்தல் முடிவுகளை அறிவிக்க கூடாது என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார். இந்த நிலையில் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கும் இந்த வழக்குகளுடன் சேர்க்கப்பட்டுள்ளது. விடுமுறை தினமான இன்று இந்த வழக்குகள் விசாரணைக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார். இதையடுத்து, இந்த வழக்கு இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.