சென்னை: வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று தாக்கல் செய்தார். இது குறித்து தலைமைச்செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையில் வேளாண் துறை செயலாளர் சமயமூர்த்தி பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, நிதித்துறை செயலாளர் முருகானந்தம், வேளாண் இயக்குநர் அண்ணாதுரைமற்றும் அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
இந்த சந்திப்பின்போது நிருபர்களிடம் வேளாண் துறை செயலாளர் சமயமூர்த்தி பேசியதாவது: வேளாண் நிதிநிலை அறிக்கையில், சிறு, குறு விவசாயிகள் 72% உள்ளனர். அவர்கள் சிறுகுறு இயந்திரங்களை பயன்படுத்தி வேளாண் செய்ய வேண்டும். அதன்படி, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின்படி 2,504 கிராமங்களில் டிராக்டர், அறுவடை இயந்திரங்கள் உள்ளிட்ட ரூ.125 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 12,500 கிராமங்களில் 4,500 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதில், நபார்டு மூலமாக ரூ.500 கோடி கடன் பெற்று, வேளாண் கருவிகள் விவசாயிகளுக்கு வாடகைக்கு கொடுக்கப்படும். அங்கக வேளாண்மையை நீலகிரியில் ஊக்குவிக்க உள்ளோம்.
இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு நம்மாழ்வார் பெயரில் விருதுகள் வழங்கப்படும். இந்தாண்டு வேளாண்மை துறைக்கு மட்டுமல்லாது பல்வேறு துறைகள் உட்பட 38 ஆயிரம் கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கேழ்வரகு, கம்பு கோவையில் உள்ள அங்கன்வாடிகளில் பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கடந்தமுறை நீலகிரி, தருமபுரியில் முதற்கட்டமாக வழங்க திட்டமிட்டிருந்தோம். பிலிப்பைன்ஸ், தாய்லாந்து நாடுகளில் தேங்காய்களை விவசாயிகள் ஏற்றுமதி செய்கின்றனர். அதுபோல, தேய்காய்களுக்கான மதிப்புக்கூட்டை அதிகரிக்க அதனை கற்றுக்கொள்ள விருப்பம் உள்ள விவசாயிகள் அழைத்து செல்லப்படுவர்.
அதேபோல, டெல்டா பகுதிகளில் உற்பத்தியாகும் வேளாண் சார்ந்த தொழில்களில் வரக்கூடிய பொருள்களுக்கு மதிப்பு கூட்டி அங்கே விற்பனை செய்யவோ அல்லது ஏற்றுமதி செய்யும் வகையிலோ கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும். இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட வேளாண் பொருட்கள் உண்மையானவையா என கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மூதாதையர்கள் பெயர்களில் பட்டா இருந்து தற்போது விவசாயம் செய்து வரும் வாரிசு விவசாயிகளை நெறிமுறை படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கான வழிகாட்டுதல்கள் ஒன்றிய அரசு வழங்குவதால், வாரிசு விவசாயிகளுக்கு அரசின் திட்டங்களை வழங்க வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதேபோல, 10 ஏக்கர் தொகுப்பாக உள்ள தரிசு நிலங்களை விவசாய நிலங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகளுடைய ஒத்துழைப்பும், பங்களிப்பும் இருந்தால் தான் இந்த திட்டத்தை செய்ய முடியும். குறைந்தபட்ச ஆதார விலையை பொறுத்தவரை ஒன்றிய அரசுதான் நிர்ணயிக்கும். இதில் சர்க்கரை, பருத்தி, எண்ணெய் வித்துக்களுக்கு தான் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெங்காயம், தக்காளி உள்ளிட்ட மற்ற தோட்டக்கலை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய கடிதம் வேண்டுமானால் எழுதலாம். இருப்பினும், வெங்காயம், தக்காளி அனைத்து நாட்களிலும் சீரான விலைக்கு கிடைக்க மாநில அரசு ஏற்பாடு செய்து வருகிறது. அதேபோல, மாநகர், நகரங்களில் உழவர் சந்தைகள் பெரும்பாலும் நல்லமுறையில் சென்று கொண்டிருக்கிறது. பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில் உழவர் சந்தைகளில் விற்பனை செய்ய விவசாயிகளும், பொருட்களை வாங்க பொதுமக்களும் அதிக அளவில் முன் வருவதில்லை. இதனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு வேளாண் பல்கலையில் தமிழ்வழியிலான தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பட்டப் படிப்புகள் 95 சதவீதம் முழுமை அடைந்துள்ளன. மேலும் ஆர்வம் அதிகமாக உள்ள படிப்புகளுக்கு தேவையை பொருத்து செயல்படுத்துவோம். பாரம்பரிய நாட்டு விதைகளை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல நாட்டு விதைகளை மீட்கும் விவசாயிகளுக்கு தோட்டகலை சார்பில் பரிசுகள் வழங்கப்படும். வேளாண்மை துறைக்கு மட்டுமல்லாது பல்வேறு துறைகளுக்கு 38 ஆயிரம் கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.