வேளாண் பட்ஜெட் 2023-24: சிறுதானிய பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் நீலகிரி, தர்மபுரி மாவட்டத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு

தமிழக அரசின் வேளாண்மை பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: கடந்த வேளாண் பட்ஜெட்டில் 20 மாவட்டங்களை உள்ளடக்கி அறிவிக்கப்பட்ட இரண்டு சிறு தானிய மண்டலங்களுடன் உழவர்களின் கோரிக்கைகளை ஏற்று, நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய ஐந்து மாவட்டங்கள் புதிதாக சேர்த்து கொள்ளப்படும். சிறுதானியப் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில், நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களிலுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு கிலோ கேழ்வரகு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கச் செய்திட கூட்டுறவு சங்கங்கள் மூலம்  மதிப்புக்கூட்டப்பட்ட குறு தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டு சென்னை, கோயம்புத்தூர் மாநகர அமுதம், சிந்தாமணி, காமதேனு கூட்டுறவு விற்பனை அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

2023ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அறிவித்திருப்பதை ஒட்டி, தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த இயக்கத்தில், வரும் ஆண்டில், தரிசு நிலங்களை சீர்திருத்தம் செய்தும், மாற்றுப் பயிர் சாகுபடி மூலமாகவும் 50,000 ஏக்கரில் சிறுதானிய சாகுபடி மேற்கொள்ளவும், சிறுதானிய விவசாயிகளை ஒன்றிணைத்து 100 சிறுதானிய உற்பத்திக் குழுக்களை உருவாக்கி பயிற்சி அளிப்பதற்கும். 12,500 ஏக்கரில் தெளிப்பு நீர்ப்பாசனம் அமைக்கவும் மானியம் அளிக்கப்படும்.

சிறுதானியங்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய ஏதுவாக சிறுதானிய பதப்படுத்தும் மையங்கள் அமைக்க உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானிய உதவி அளிக்கப்படும். சிறுதானிய திருவிழாக்களும்  இவ்வியக்கத்தின் மூலம்  நடத்தப்படும். வரும் ஆண்டில், ஒன்றிய, மாநில அரசு நிதி உதவியுடன் ரூ.82 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படும். சிறுதானிய உற்பத்தி, நுகர்வு ஆகியவற்றை அதிகரிக்கும் வகையில் முக்கிய  சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு போன்றவற்றை நேரடியாக கொள்முதல் செய்து, நியாய விலைக்கடைகளில் சிறுதானியங்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும். அரசு நிறுவனங்கள், கல்வி நிலைய விடுதிகளில், சத்துள்ள சிறுதானிய உணவு  அளிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* கலைஞரின் கிராம ஒருங்கிணைந்த திட்டத்துக்கு ரூ.230 கோடி

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி  திட்டம், 2,504 கிராம ஊராட்சிகளில் ரூ.230 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். 10 ஏக்கர் தரிசாக உள்ள பகுதிகளைக் கண்டறிந்து, ஆழ்துளைக் கிணறு அமைத்து, மின் இணைப்பு அல்லது சூரிய சக்தி பம்ப்செட்டுகள் இலவசமாக அமைத்துத் தரப்படும். மின் இணைப்பு கிடைத்தவுடன், மா, கொய்யா, நெல்லி போன்ற பழமரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு, அதில் சொட்டு நீர்ப் பாசன வசதி மானியத்தில் நிறுவப்படும். ஊரக வளர்ச்சி-உள்ளாட்சி துறைக் கட்டுப்பாட்டில் உள்ள சிறுபாசனக் குளங்கள், ஊருணிகள், வரத்துக் கால்வாய்களைத் தூர்வாரி, பாசன நீர் கடைமடை வரை செல்வதற்கு வழிவகை செய்யப்படும். இத்திட்டம் செயல்படுத்தப்படும் கிராமப் பஞ்சாயத்துகளில் விளைபொருட்களை உலர வைத்து சேமிப்பதற்கு வசதியாக 250 உலர்களத்துடன் கூடிய தரம் பிரிப்புக் கூடங்கள் கட்டித் தரப்படும். ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் தடுப்பணைகள், கசிவுநீர்க்குட்டைகள், வயலுக்குச் செல்லும் சாலைகள் போன்ற பல்வேறு பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, திட்டம் செயல்படுத்தப்படுவதால், சாகுபடி நிலப் பரப்பு உயர்ந்து இந்த கிராமங்கள் தன்னிறைவு அடையும்.

* 385 மையங்களில் இ-சேவை

தகுதியான அனைத்து விவசாயிகளுக்கும் அரசின் திட்ட பலன்கள் சேரும் வகையில், வேளாண்மை உழவர் நலன் துறையின் மூலம் வழங்கப்படும் அனைத்து பயன்களும் பெற விவசாயிகள் மின்னணு முறையில் விண்ணப்பிக்க தேவையுள்ளது. எனவே, விவசாயி சார்ந்து அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் மின்னணு முறையில் விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ள உதவும் வகையில் 37 மாவட்டங்களில் 385 வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை உதவியுடன் மின்னணு உதவி மையங்கள்(இ-சேவை) ரூ.2 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

Related Stories: