×

ரூ.2.35 கோடி இழப்பீட்டு தொகை வழங்காததால் விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் ஆபீசை ஏலம் விட நோட்டீஸ்

விருதுநகர்: மதுரை, அரசரடியை சேர்ந்த அரசு ஒப்பந்தக்காரர் சவரிமுத்து. இவர் கடந்த 1998ல் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியில், மதுரை மாவட்டம், திருமங்கலம் சுங்கச்சாவடி முதல் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வரை சாலை பணிகளை செய்துள்ளார். 30 சதவீத பணிகள் முடிந்த நிலையில், சாலை ஒப்பந்த பணிகளை வேறு நபருக்கு மாற்றி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். சவரிமுத்துக்கு வழங்க வேண்டிய தொகை வழங்கப்படவில்லை.

இதைத்தொடர்ந்து சவரிமுத்து விருதுநகர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் கடந்த 2002ல் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையில், இழப்பீடாக ரூ.1 கோடியே 22 லட்சத்து 97 ஆயிரத்து 686 தொகையை 9 சதவீத வட்டியுடன் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.68 லட்சத்து 43 ஆயிரம் மட்டுமே டெபாசிட் செய்தனர். இதை தொடர்ந்து ஐகோர்ட் மதுரை கிளையில் சவரிமுத்து மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், கடந்த 13.9.2002 முதல் 23.10.2008 வரை வட்டி சேர்த்து ரூ.1 கோடியே 90 லட்சத்து 61 ஆயிரத்து 412ஐ செலுத்த உத்தரவிட்டது. ஆனால் உரிய இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை.

இதையடுத்து விருதுநகர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் சவரிமுத்து முறையீட்டு மனு தாக்கல் செய்தார். வட்டியுடன் ரூ.2 கோடியே 35 லட்சத்து 2 ஆயிரத்து 208ஐ இழப்பீடாக வழங்க கடந்த 18.8.2022ல் நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது வரை இழப்பீடு தொகை வழங்காத நிலையில் மேல்முறையீட்டில் நீதிபதி ஹேமானந்த குமார் உத்தரவின் பேரில், நீதிமன்ற இளநிலை கட்டைளப்பணியாளர் ஜெயக்குமார் விருதுநகர் கலெக்டராக உள்ள ஜெயசீலன் அலுவலக சுவரில் ஏல அறிவிப்பு நோட்டீஸை நேற்று ஒட்டிச் சென்றார். சர்வே எண் 11/1ல் உள்ள கலெக்டர் அலுவலக கட்டிடங்கள் மற்றும் காலி இடங்கள் மார்ச் 31 அன்று ஏலம் விடப்பட உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Virudhunagar Collector ,Jayaseelan , Notice to auction Virudhunagar Collector Jayaseelan's office for non-payment of Rs 2.35 crore compensation
× RELATED பட்டாசு கடைகள், பட்டாசு குடோன்களை மூட கலெக்டர் உத்தரவு