கிருஷ்ணகிரி அருகே பயங்கரம் காதல் திருமணம் செய்த வாலிபர் ஒரே மாதத்தில் வெட்டிக் கொலை: மணப்பெண்ணின் தந்தை வெறிச்செயல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த ஒரே மாதத்தில், வாலிபரை மணப்பெண்ணின் தந்தை உறவினர்களுடன் சேர்ந்து நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்தார். கிருஷ்ணகிரி அருகே கிட்டம்பட்டியை சேர்ந்தவர் சின்னபையன். இவரது மகன் ஜெகன்(28). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரும் கிருஷ்ணகிரி மாவட்டம், அவதானப்பட்டி, முழுக்கான்கொட்டாயை சேர்ந்த சங்கர் மகள் சரண்யாவும்(21) காதலித்துள்ளனர். ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த போதிலும், பெண்ணின் பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்களின் எதிர்ப்பை மீறி ஜெகன், சரண்யாவை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்தார். இதனால் சரண்யாவின் குடும்பத்தினர் ஜெகன்-சரண்யாவுடன் பேச்சுவார்த்தையை தவிர்த்தனர். இந்நிலையில், நேற்று மதியம் 2 மணி அளவில் ஜெகன் கிட்டம்பட்டியில் இருந்து வேலைக்காக, தர்மபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் டேம் ரோடு மேம்பாலம் அருகில் சர்வீஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை வழிமறித்த சரண்யாவின் தந்தை சங்கர் மற்றும் உறவினர்கள் 2 பேர் கீழே தள்ளி அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.  

இதில் ஜெகன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். பின்னர் மூவரும் 2 டூவீலர்களில் அங்கிருந்து சென்றனர். தகவலறிந்து காவேரிப்பட்டணம் போலீசார் வந்து விசாரித்தனர். இதற்கிடையே ஜெகனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திரண்டு உடலை சாலையில் இருந்து எடுக்க விடாமல் மறியலில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாக்கூர் மற்றும் போலீசார் வந்து கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். போலீசார் வழக்கு பதிந்து சங்கர் மற்றும் அவரது உறவினர்கள் 2 பேரை தேடி வருகின்றனர்.

* கொடூர காட்சிகள் இணையத்தில் வைரல்

தர்மபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நடந்த இந்த கொலையை சிலர் செல்போனில் படம் பிடித்துள்ளனர். ஜெகனை ஒருவர் கால்களை பிடித்துக் கொள்வதும், 2 பேர் சரமாரியாக வெட்டுவதும் வீடியோவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் நேற்று பிற்பகல் முதல் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: