பாஜ தனித்து போட்டியிட நெல்லையில் போஸ்டர்

நெல்லை: மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் பாஜ தனித்து போட்டியிடக்கோரி நெல்லையில் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பாஜ - அதிமுக இடையே மோதல் அரங்கேறி வருகிறது. பாஜவில் உள்ள சில முக்கிய பிரமுகர்கள் அதிமுகவிற்கு தாவிய நிலையில், அதிருப்தி அடைந்த பாஜ தலைவர் அண்ணாமலை சமீபத்தில், பாஜ தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்றும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் ராஜினாமா செய்வேன் என்றும் பேசினார். அவரது பேச்சுக்கு பாஜ தலைவர்களிடம் போதிய வரவேற்பு இல்லை. கட்சியின் பிற மாநில நிர்வாகிகள் பாஜ தனித்துப் போட்டி என்பது அண்ணாமலையின் சொந்த கருத்து என குறிப்பிட்டனர்.

இந்நிலையில் நெல்லை மாநகரில் வண்ணார்பேட்டை, நெல்லை சந்திப்பு, பாளை என பல்வேறு இடங்களில், மக்களவை தேர்தலில் பாஜ தனித்து போட்டியிட வேண்டும் என குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ‘எங்கள் நரேந்திரரே தனித்து வா, தாமரையை 40 இடங்களிலும் மலரச் செய்வோம்’ என்ற வாசகங்களோடு தேவேந்திர குல வேளாளர் சங்க போஸ்டர்கள் மாநகரில் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன. அண்ணாமலையின் கருத்தை ஆதரிப்பது போல் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பாஜ, அதிமுக கட்சி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: