×

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.37.5 லட்சம் மோசடி மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கார் டிரைவர், மனைவி மீது வழக்கு

சேலம்: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.37.5 லட்சம் மோசடியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் கார் டிரைவர் மீது சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். சேலம் மணியனூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதியை சேர்ந்தவர் ஜோதிபிரகாஷ். இவரது மனைவி தேன்மொழி(30). இவரது சகோதரர் காசிவிஸ்வநாதன் மற்றும் உறவினர்கள் சீனிவாசன், சுமதி ஆகியோர் கடந்த டிசம்பர் மாதம் சேலம் மாநகர போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் மனு அளித்தனர்.

இதில், 2018-2019ல் கோவை பட்டணம் பகுதியை சேர்ந்த சுதாகரன், அப்போதைய அதிமுக அமைச்சர் எஸ்.பி. வேலுமணியிடம் டிரைவராக பணியாற்றி வருவதாக தெரிவித்து அவருடன் எடுத்த புகைப்படங்களை காண்பித்தார். சென்னை தலைமை செயலகத்திற்கு அழைத்துச் சென்று ஒரு சிலரை அறிமுகப்படுத்தினார். கலெக்டர் அலுவலகத்தில் பத்திர பதிவுத் துறையிலும், கிராம நிர்வாக அலுவலர் பணியும் வாங்கித் தருவதாக சேலம் மாவட்டத்தில் 9 பேரிடம் இருந்து ரூ.37.5 லட்சத்தை பெற்றார். பின்னர், சுதாகரன் பணி ஆணைகளை தயார் செய்து எங்களுக்கு வழங்கினார்.

பின்னர் அவை போலி என்று தெரியவந்தது. பணத்தை திருப்பி கேட்டபோது சுதாகரனும், அவரது மனைவி பிரபாவதியும் எங்களை தகாத வார்த்தைகளை கூறி திட்டினர். எங்களது பணத்தில் சுதாகரன் சொத்துகளை வாங்கியுள்ளார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தரவேண்டும் என்று கூறியிருந்தனர். இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார், சுதாகரன்  அவரது மனைவி பிரபாவதி ஆகியோர் மீது மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


Tags : Ex ,minister ,SB ,Velumani , Ex-minister SB Velumani's car driver, wife charged with fraud of Rs 37.5 lakh claiming to get government jobs
× RELATED கொடியேற்றி 200 பேருக்கு அன்னதானம்...