×

5 எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் உண்ணாவிரதம் அறிவிப்பு கேரள சட்டசபை காலவரையின்றி ஒத்திவைப்பு

திருவனந்தபுரம்: எதிர்க்கட்சியை சேர்ந்த 5 எம்எல்ஏக்கள் சபையின் மையப்பகுதியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்ததை தொடர்ந்து கேரள சட்டசபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. கேரள சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் தொடங்கியது. இந்த மாதம் 30ம் தேதி வரை சபையை நடத்த தீர்மானிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் தாங்கள் கொண்டுவரும் ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுவதாக கூறி காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் சட்டசபையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சபாநாயகர் அலுவலகத்தை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது சபை காவலர்கள் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர். இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் 3 எம்எல்ஏக்கள் காயமடைந்தனர். இதற்கிடையே ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். எதிர்க்கட்சி எம்எல்ஏக்களின் அமளி காரணமாக கடந்த 4 நாட்களாக சட்டசபை ஒத்திவைக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் நேற்று காலை சபை தொடங்கியது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் பேசினார். தங்களது கோரிக்கைகள் அனைத்தும் தொடர்ந்து நிராகரிக்கப்படுவதால் ஐக்கிய ஜனநாயக முன்னணியை சேர்ந்த 5 எம்எல்ஏக்கள் சபையின் மையப் பகுதியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். இதனால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து 5 மசோதாக்கள் விவாதமின்றி நிறைவேற்றப்பட்ட பிறகு சட்டசபை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஷம்சீர் அறிவித்தார்.



Tags : Kerala Assembly , 5 opposition MLAs announce fast Adjournment of Kerala Assembly indefinitely
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...