×

சென்னை - கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க ஏப்.8ம் தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி

டெல்லி: சென்னை - கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க ஏப்.8-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். தாம்பரம் - செங்கோட்டை, திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ள இடையேயான ரயில் சேவைகள் உள்ளிட்ட ரூ.294 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளார். இந்தியாவில் அதிவேக ரயில் சேவையை அமல்படுத்தும் வகையில் வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பயண நேரத்தை பெரிதும் குறைப்பதால் பலரும் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். அதேசமயம் கட்டணம் அதிகம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வந்தே பாரத் ரயில் சேவை பயன்பாட்டில் இருந்து வருகிறது.

தற்போது வரை 10 வந்தே பாரத் ரயில்கள் மூலம் பல்வேறு நகரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னை - கோவை ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் சேவையை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே சென்னை - மைசூரு இடையில் அதிவேக வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழ்நாட்டின் இரண்டாவது வந்தே பாரத் ரயில் சேவையானது சென்னை - கோவை ஆகிய நகரங்களுக்கு இடையில் வரவுள்ளது. இதனை பிரதமர் மோடி வரும் ஏப்ரல் 8ஆம் தேதி கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளார். தமிழகத்திற்குள் இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரெயில் இதுவாகும்.

மேலும் ஏப்ரல் 8ஆம் தேதி அன்று திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி இடையில் 37 கிலோமீட்டர் தூர அகல ரயில் பாதையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதில் 294 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதுமட்டுமின்றி தாம்பரம் - செங்கோட்டை இடையில் வாரம் மூன்று நாட்கள் இயக்கப்படும் ரயில் சேவையும் தொடங்கி வைக்கப்பட உள்ளது. ஒருங்கிணைந்த விமான நிலைய முனையத்தை திறந்து வைக்கிறார். இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

Tags : Narendra Modi ,Tamil Nadu ,Vande Bharat ,Chennai ,Coimbatore , Prime Minister Narendra Modi is coming to Tamil Nadu on April 8 to inaugurate the Vande Bharat train service between Chennai and Coimbatore
× RELATED 2 நாள் பயணமாக பூட்டான் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி..!!