நெடுஞ்சாலை ஒப்பந்ததாரருக்கு இழப்பீடு வழங்கவில்லை!: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏல அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டிச்சென்றதால் பரபரப்பு..!!

விருதுநகர்: நெடுஞ்சாலை ஒப்பந்ததாரருக்கு இழப்பீடு வழங்காததால் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏல அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. மதுரை அரசரடி பகுதியை சேர்ந்தவர் சபரிமுத்து. இவர் 1998ம் ஆண்டு திருமங்கலம் முதல் சாத்தூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலை பணிகளை டெண்டர் மூலம் மேற்கொண்டு வந்துள்ளார். சுமார் 30 சதவீதம் பணிகள் முடிந்த பின்னர், நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தத்தை வேறு ஒருவருக்கு வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் சபரிமுத்துவுக்கு நிலுவை தொகை இருந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த 2005ம் ஆண்டு டெண்டர் விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சவரிமுத்து வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில் 2007ம் ஆண்டு ஒப்பந்ததாரருக்கு 68 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் சபரிமுத்துவுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படாததால் மீண்டும் அவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். கடந்த 18.8.22ம் ஆண்டு சபரிமுத்துவுக்கு 2 கோடியே 35 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் ரூ.2.35 கோடி ரூபாய் இழப்பீட்டை நெடுஞ்சாலை ஒப்பந்ததாரருக்கு வழங்கவில்லை என குற்றம்சாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏல அறிவிப்பு நோட்டீஸை விருதுநகர் கூடுதல் மாவட்ட நீதிமன்ற ஊழியர்கள் ஒட்டினர்.

ஆட்சியர் அலுவலகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகள் அடங்கிய அசையா சொத்துகள் மார்ச் 31ல் ஏலம் விடப்பட உள்ளதாக நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தரப்பில் கேட்டபோது சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீதிமன்ற ஊழியர்கள் ஏல நோட்டீஸை ஒட்டிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: