கோவை, வாயில் காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த பெண் யானை உயிரிழப்புக்கு ‘அவுட்டுகாய்’ வெடித்ததே காரணம்!

கோவை: வாயில் காயத்துடன் சிகிச்சை பெற்றுவந்த பெண் யானை உயிரிழப்புக்கு அவுட்டுகாய் (நாட்டு வெடி) வெடித்ததே காரணம் என தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக, வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வனத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஆதிமாதையனூர் பகுதியில், வாயில் காயமடைந்த நிலையில் சுற்றித் திரிந்த பெண் யானையை பிடித்து, ஆனைமலை புலிகள் காப்பகத்தின் உலாந்தி வனச்சரகத்திலுள்ள வரகளியாறு முகாமுக்கு கொண்டு சென்று, வன கால்நடை மருத்துவக் குழுவினரின் தொடர் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு யானை உயிரிழந்தது. இதுதொடர்பாக வனத்துறையினர் கூறியதாவது; பெண் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது தொடர்பாக உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உதவி வனப் பாதுகாவலர் செல்வம், உலாந்தி வனச்சரக அலுவலர் மு.சுந்தரவேல், நேச்சுரல் இன்ஸ்டிடியூசன் ஆஃப் டிரஸ்ட் அமைப்பின் தன்னார்வலர் மதன்மோகன் ஆகியோரின் முன்னிலையில், வனக் கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார், உதவி வனக் கால்நடை மருத்துவ அலுவலர்கள் விஜயராகவன், செந்தில்நாதன் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினரால் நேற்று உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனையின் முடிவில், அவுட்டுகாய் வெடித்ததில் யானையின் தாடை மற்றும் பற்கள் சேதமடைந்துள்ளது. இதனால், யானையால் உணவு உட்கொள்ள முடியாமல் உடல் பலவீனமாகி இறந்துவிட்டதாக, மருத்துவக் குழுவினரால் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட வன அலுவலர் டி.கே.அசோக்குமார் கூறுகையில்; “அவுட்டுகாய் வெடித்து யானை உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதால், காரமடை வனச்சரகத்தில் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

யானை எந்த பகுதியில் இருந்து வந்தது? அதன் நடமாட்டம் எங்கெல்லாம் இருந்தது? எங்கு இதுபோன்ற சம்பவம் நடந்து இருக்கலாம்? என விசாரணை செய்து வருகிறோம் என்று அவர் கூறியுள்ளார். கடந்த ஆண்டு போளுவாம்பட்டி வனச்சரகத்தில் அவுட்டுகாயை கடித்ததால் வாய் சிதைந்து உணவு உட்கொள்ள முடியாமல் இளம் பெண் யானை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இறைச்சிக்காக காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக ‘அவுட்டுகாய்’ களை சிலர் பயன்படுத்துகின்றனர். அதை உணவு பொருள் என கருதி உண்ணும் வன விலங்குகள் வாய் சிதைந்து உயிரிழப்பது தொடர்கிறது.

Related Stories: