பைக் மீது தெலுங்கு நடிகரின் லாரி மோதி மகன் இறந்தார் போலீசார் வழக்கை தவறாக பதிவு செய்ததாக பெண் தீக்குளிக்க முயற்சி-வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

வேலூர் : தெலுங்கு நடிகரின் லாரி மோதியதால் பைக்கில் சென்ற மகன் இறந்ததில், போலீசார் வழக்கை தவறாக பதிவு செய்ததாக கூறி, பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் மனு அளிக்க வந்த பெண் ஒருவர், ஒரு வாலிபரின் புகைப்படத்தை கையில் வைத்தபடி, திடீரென அரங்கின் வெளியே மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதைக்கண்ட போலீசார் தடுத்து நிறுத்தி மண்ணெண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்து தண்ணீர் ஊற்றி அவரை சமாதானப்படுத்தினர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில், கே.வி.குப்பம் அடுத்த வடுகந்தாங்கல் கிராமத்ைத சேர்ந்த கோட்டீஸ்வரி(50) என தெரியவந்தது. பின்னர் அவரை கலெக்டரிடம் அழைத்துச்சென்றனர். அங்கு அவர் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

‘எனது மகன் ரவிவர்மா(26), பிஇ படித்துவிட்டு அமெரிக்கா செல்வதற்காக பாஸ்போர்ட் எடுத்திருந்தார். கடந்த 2018ம் ஜூன் மாதம் குடியாத்தம் பகுதியில் பைக்கில் சென்றபோது பைக் மீது லாரி மோதியது. விபத்தில் அவன் பலியானான். என் மகன் மீது மோதிய லாரி, தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுக்கு சொந்தமானது என தெரியவந்தது. அந்த வழக்கை குடியாத்தம் டவுன் போலீசார் சரியாக விசாரிக்காமல், ‘எனது மகன் பைக்கில் சென்று லாரியில் மோதியதாகவும, எனது மகன் மீதுதான் தவறு’ என வழக்கை பதிவு செய்துள்ளனர்.

குறிப்பாக விபத்து இழப்பீடு பெறமுடியாத வகையில் திட்டமிட்டு வழக்கை திசை திருப்பி ஒருதலைபட்சமாக செயல்பட்டுள்ளனர். உண்மையில் எனது மகன் மீதுதான் லாரி மோதியது. எனவே, இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நீதியை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார். மனுவை பெற்ற கலெக்டர், நீதி பெற வந்தீர்களா அல்லது தீக்குளிக்க வந்தீர்களா என கேட்டார். அதற்கு அந்த பெண், நியாயம் கேட்டுதான் வந்தேன் என்றார். தொடர்ந்து தீக்குளிக்கும் தவறுகள் செய்யக்கூடாது என கலெக்டர் அறிவுறுத்தினார். பின்னர் மனு மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: