×

‘ஜவுளித்தொழில் மேம்படும், ஏற்றுமதி பெருகும்’ தமிழக அரசின் பட்ஜெட்டுக்கு தொழில்துறையினர் வரவேற்பு

திருப்பூர் : ஜவுளித்தொழில் மேம்படும், ஏற்றுமதி பெருகும் என தமிழக சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை திருப்பூர் தொழில்துறையினர் உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.தமிழ்நாடு சட்டப்பேரவையில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2023-2024-ம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. பல மாவட்டங்களுக்கு சிறப்பு திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், கோவையில் மெட்ரோ ரயில் திட்டம், சேலத்தில் ஜவுளி பூங்கா,  திருப்பூர் மாவட்டத்தில் டைடல் பார்க் அமைக்கப்படும். கோவை, மதுரை, திருப்பூர், ஓசூர் பகுதிகளில் புதிய பெருநகர் வளர்ச்சி குழுமங்கள், ஈரோடு, திருநெல்வேலி, செங்கல்பட்டில் டைடல் பார்க் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டை வரவேற்று திருப்பூர் தொழில்துறையினரின் கருத்து தெரிவித்துள்ளனர்.

பியோ தலைவர் சக்திவேல்: வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கத்தில் இந்தியாவின் நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாடு முன்னேறி வருகிறது. தமிழ்நாடு முதல்வர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோருக்கு பாராட்டுகள். அரசு, தமிழகத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக மாற்ற திட்டமிட்டிருப்பது தொலை நோக்குடன் கூடிய பார்வையாகும். இந்த இலக்கை 2030-க்கு முன்பே எட்டுவதற்கு இந்த பட்ஜெட் சரியான திசையை ஏற்படுத்தி உள்ளது. பட்ஜெட்டில் தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே அதிக ஏற்றுமதி செய்யும் மாநிலமாக தமிழ்நாடு தற்போது 3வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் ஏற்றுமதியில் 9.5 சதவீதம் பங்களிப்பை தமிழகம் தருகிறது. 30.5 பில்லியன் அமெரிக்க டாலர் ஏற்றுமதி பங்களிப்பின் மூலம் வழங்குகிறது. பட்ஜெட்டில் கொடுக்கப்பட்ட கவனம் காரணமாக 2030 ம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலர்களை எட்டும்.

விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்க முன்மொழிவு, உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு, சிப்காட், ஓசூரில் திறன் மேம்பாட்டு மையம், தொழில்துறைக்கு ரூ.3,200 கோடி ஒதுக்கீடு, ராணிப்பேட்டை மற்றும் கள்ளக்குறிச்சியில் தோல் அல்லாத பாதணிகள் தயாரிக்க மேலும் 2 தொழிற்சாலைகள்,  2030ம் ஆண்டுக்குள் 14,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் மெகா மின் திட்டத்தை உருவாக்க ரூ.77,000 கோடி ஒதுக்கீடு, பசுமை எரிசக்தியில் கவனம் செலுத்துவது, வேலைவாய்ப்பு உருவாக்கம், ஏற்றுமதி, ஜிடிபி வளர்ச்சி மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்கும்.

சேலத்தில் புதிய ஜவுளிப்பூங்கா, ஈரோடு, திருநெல்வேலி, செங்கல்பட்டில் டைடல் பார்க் அமைக்கும் பரிந்துரையை வரவேற்கிறேன். இது, ஜவுளி மற்றும் ஆடைத்துறையில் உலகளாவிய ரீதியில் முன்னணியில் இருப்பதோடு, சேவை ஏற்றுமதியிலும் மாநிலம் முன்னணியில் இருக்க உதவும். கோயம்புத்தூர் மெட்ரோ திட்டத்திற்கு ரூ.9000 கோடி ஒதுக்கப்பட்டது வரவேற்கத்தக்க நடவடிக்கை. மேலும் இந்த திட்டத்தை திருப்பூர் வரை நீட்டிக்க வேண்டும். இது 2 தொழில் நகரங்களையும் இணைக்கும்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தலைவர் சுப்பிரமணியம்: தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை வரவேற்கிறேன். சேலத்தில் புதிய ஜவுளிப்பூங்கா 119 ஏக்கரில் ரூ. 880 கோடியில் அமைய உள்ளது. அதேபோல விருதுநகரில் பிஎம். மித்ரா திட்டத்தில் ஜவுளிப்பூங்கா அமைய உள்ளது. இந்த திட்டங்களால் ஜவுளித்தொழில் மேம்படும். குறிப்பாக ஏற்றுமதி பெருகும். தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும். தொழில் முனைவோருக்கான நீட்ஸ் திட்டத்துக்கு ரூ.144 கோடி மானியம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் ஆடை அலகுகளை அமைக்க அதிக தொழில் முனைவோரை ஊக்குவித்து ஈர்க்க வேண்டும். மேலும் ‘‘மக்களை தேடி மருத்துவம்’’ நீட்டிப்புக்கான அறிவிப்பை வரவேற்கிறோம். 8.35 லட்சம் பணியாளர்களை உள்ளடக்கிய 711 தொழிற்சாலைகளுக்கு மருத்துவ திட்டம், தொழில்துறைக்கு பயன் தரும். இத்திட்டத்திற்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திறன் வாய்ந்த தொழிலாளர்கள் விஷயத்தில் இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும். இது உற்பத்தி திறனை மேம்படுத்துவதற்கு காலத்தின் தேவை.

கோயம்புத்தூரில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்தமைக்கு நன்றி. இத்திட்டம் திருப்பூர் வரை நீட்டிக்கப்பட்டால், இது இப்பகுதியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். 50 சதவீதத்துக்கும் அதிகமான மின் உற்பத்தி மூலம் தமிழகத்தை பசுமை மாநிலமாக மாற்றும் நிறுவனம், 2030-க்கு முன் மரபுசாரா எரிசக்தி ஆதாரங்களில் இருந்து உற்பத்தி, 15 புதிய நீர் மின் திட்டங்கள் அமைப்பதை வரவேற்கிறோம். பொது இடங்களுக்கு இலவச வைபை சேவையை வழங்கும் நல்ல திட்டமாகும்.

திருப்பூர் ஏற்றுதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கத்தலைவர் முத்து ரத்தினம்: விருதுநகரில் அமைய உள்ள ஜவுளி பூங்காவுக்கு ரூ.1,800 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதை வரவேற்கத்தக்கது. இதை கார்பரேட் முதலாளிகள் பயன்படுவார்கள். திருப்பூரில் 90 சதவீதம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களில் ஈடுபடுபவர்கள் தான் உள்ளனர். அவர்களுக்கு ஜவுளிப்பூங்கா எந்த விதத்திலும் பயன் தராது. இந்த பட்ஜெட்டில் பின்னலாடை தொழிலுக்கு, சாதகமாக இல்லை. இந்தியாவில் 50 சதவீதம் நூற்பாலைகள் தமிழகத்தில் உள்ளன. அதை நம்பி ஜவுளித்தொழில் உள்ளது. அதற்கான மூலப்பொருட்களை கட்டுப்படுத்த கோரி தமிழ்நாடு பருத்தி கொள்முதல் கழகம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தோம். ஆனால் அதுகுறித்து அறிவிப்பு இல்லை.

தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) வைகிங் ஈஸ்வரன்: தமிழக பட்ஜெட்டில் தொழில் மேம்பாட்டுக்கான அக்கறையும், ஈடுபாடும் தெரிகிறது. தொழில் பயிற்சி மேம்பாட்டுக்கான திட்டம் வரவேற்கத்தக்கது. கைத்தறி நெசவாளர்களுக்கும், விசைத்தறி நெசவாளர்களுக்கும் மின்சார யூனிட் மானியம் அதிகமாக்கப்பட்டதை உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் பின்னலாடை தொழிலுக்கான விசேஷ அறிவிப்புகள் (வரி நிலுவைக்கான சமாதான் திட்டம்- தொழிலாளர் குடியிருப்பு வசதி ) பட்ஜெட் அறிவிப்பில் காணப்படவில்லை. தமிழகத்தின் பொதுவான வளர்ச்சிக்கான திட்டங்கள் என்பதால் வரவேற்கிறோம்.

திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க தலைவர் கோவிந்தசாமி: தமிழக அரசின் பட்ஜெட் வரவேற்கும் வகையில் உள்ளது. பெண்களுக்கான உரிமைத்தொகை மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் பலரும் பயனடைவர். அவர்களின் வாழ்க்கை தரம் உயரும். இதுபோல கோவை, அவினாசி, சத்தியமங்கலம் பகுதிக்கு மெட்ரோ ரயில் பாதை. சேலத்தில் ரூ.800 கோடி பரப்பளவில் புதிய ஜவுளிப்பூங்கா மற்றும் கைத்தறி பொருட்களின் தரத்தை உயர்த்தவும், நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தவும், சந்தைப்படுத்தும் வாய்ப்புகளை ஏற்படுத்தவும் ரூ.20 கோடி மதிப்பில் கைத்தறி பூங்கா அமைக்கப்படும் என்பது உள்பட ஏராளமான அறிவிப்புகள் வரவேற்கும் வகையில் உள்ளன.



Tags : Tamil Nadu government , Tirupur: The textile industry will improve and exports will increase, the budget tabled in the Tamil Nadu Legislative Assembly yesterday, Tirupur industrialists.
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...