×

விருத்தாசலம் பகுதியில் திடீர் மழை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 50 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து சேதம்-விவசாயிகள் கவலை

விருத்தாசலம் : விருத்தாசலம் பகுதியில் திடீர் மழையின் காரணமாக தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த 50 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வயலூர், பூதாமூர், கோமங்கலம், தொரவலூர், கருவேப்பிலங்குறிச்சி உள்ளிட்ட பல இடங்களில் விவசாயிகள் விளைவிக்கும் நெல்லை அருகிலேயே விற்பனை செய்து கொள்ளும் வசதிக்காக தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன.

 சம்பா பருவ சாகுபடி முடிவடைந்த நிலையில் விவசாயிகள் விளைவித்த நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அப்பகுதி விவசாயிகள் அடுக்கி வைத்தனர். நேற்று முன்தினம் இரவு திடீரென கனமழை பெய்தது. இடைவிடாமல் பெய்த மழையால் சாலைகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்து சேதமானது. இதனால் நெல்லின் தரம் குறைந்து விலையும் குறையும் என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் விவசாயிகளுக்கு தேவையான தார்ப்பாய் வசதிகள் எதுவும் கொள்முதல் நிலைய நிர்வாகம் செய்து கொடுக்காததால் மூட்டைகள் மழையில் நனைந்ததாக புகார் கூறுகின்றனர்.

தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் சுமார் 50 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம் ஆகி இருக்கலாம் என மூத்த விவசாயி ஒருவர் கூறினார். எனவே, இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Vrutassalam , Vridthachalam: Due to sudden rain in Vridthachalam area, 50 thousand paddy was stored in temporary direct paddy procurement stations.
× RELATED விருத்தாசலம் அருகே மன்னம்பாடி-...