வடபழனி, திருவான்மியூர், வியாசர்பாடி ஆகிய 3 பணிமனைகளை மேம்படுத்த ரூ.1,600 கோடி நிதி ஒதுக்கீடு: 1000 புதிய பேருந்துகள் வாங்கப்படும்

சென்னை: வடபழனி, திருவான்மியூர், வியாசர்பாடியில் உள்ள பேருந்து பணிமனைகளை மேம்படுத்த ரூ.1600 கோடி  நிதி ஒதுக்கப்பட்டு, 1000 புதிய பஸ்கள் வாங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: நகரங்களில் தற்போதுள்ள பேருந்து பணிமனைகள் முக்கிய இடங்களில் அமைந்திருந்தாலும், அவற்றின் முழுப் பயன்பாடு வெளிக்கொணரப் படவில்லை. பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தவும், பேருந்து பணிமனைகளை உயர்தர போக்குவரத்து மையங்களாக தரம் உயர்த்தவும் அரசால் திட்டமிடப்பட்டுள்ளது. 2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் முதற்கட்டமாக ரூ.1600 கோடியில் வடபழனி, திருவான்மியூர், வியாசர்பாடியில் உள்ள பேருந்து பணிமனைகள் மேம்படுத்தப்படும்.

இரண்டாம் கட்டமாக, தாம்பரம், திருவொற்றியூர், சைதாப்பேட்டையில் உள்ள 3 பணிமனைகள் ரூ.1,347 கோடி முதலீட்டில் மேம்படுத்தப்படும். தரமான வசதியான போக்குவரத்து சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்காக பேருந்துகளை தொடர்ந்து புதுப்பிப்பதற்கான தேவை எழுந்துள்ளது. 1000 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்யவும், 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் ரூ.500 கோடி நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த மதிப்பீடுகளில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்திற்கு ரூ.2,800 கோடி, மாணவர்களுக்கான பேருந்து கட்டண மானியத்திற்கு ரூ.1500 கோடி, டீசல் மானியத்திற்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது நம் மாநிலத்தின் போக்குவரத்து அமைப்பில் ரயில்வே துறையின் பங்கு மிகவும் குறைவாகவே உள்ளது. இந்நிலையை சரிசெய்ய இந்திய ரயில்வே துறையுடன் ஒருங்கிணைந்து மாநிலத்தில் புதிய ரயில் திட்டங்களை கண்டறிந்து செயல்படுத்திட தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்துடன் இணைந்து ஒரு சிறப்பு நிறுவனத்தை அரசு உருவாக்கும். இந்த மதிப்பீடுகளில் போக்குவரத்து துறைக்கு ரூ.8,056 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: