×

அடையாறு ஆற்றின் மறுசீரமைப்பு பணிக்கு ரூ.1,500 கோடி ஒதுக்கீடு

சென்னை: அடையாறு ஆற்றில் மறுசீரமைப்பு பணிகள் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும், என பட்ஜெட்டில் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது: சிங்கார சென்னையை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக அடையாறு, கூவம் உள்ளிட்ட நீர்வழிகளை சுத்தப்படுத்தி, மறுசீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 44 கி.மீ நீளமுள்ள அடையாறு ஆற்றின் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தில் கழிவுநீர் ஆற்றில் கலப்பதை தடுத்தல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல் போன்ற ஆற்றை தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், எழில் கொஞ்சும் பூங்காக்கள், பசுமை நடைபாதைகள், திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடங்கள், கண்கவர் பொழுதுபோக்கு அம்சங்கள் அடையாறு ஆற்றங்கரையை அலங்கரிக்கும்.

இந்த பணிகள், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் ரூ.1,500 கோடி செலவில் செயல்படுத்தப்படும். மேலும், நகர்ப்புற உள்ளாட்சிகளை தரம் உயர்த்தியதன் காரணமாக, அருகில் இருக்கும் புறநகர் பகுதிகளும் அவற்றோடு இணைக்கப்பட்டுள்ளன.  அவற்றிலுள்ள மண் சாலைகளை தரம் உயர்த்துவது அவசியமாகும். இப்பகுதிகளில், 4,540 கி.மீ. நீளமுள்ள மண் சாலைகளில், 1,633 கி.மீ. மண் சாலைகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்கெனவே உள்ளாட்சி அமைப்புகளால் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், இந்தாண்டு முதல் 1,424 கி.மீ. மண் சாலைகள், மொத்தம் ரூ.1,211 கோடி செலவில் தரமான சாலைகளாக மேம்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Adyar river , Allocation of Rs.1,500 crore for restoration of Adyar river
× RELATED அடையாறு நதி சீரமைப்புக்கு ரூ.1500 கோடி...