×

ரூ.97 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நகர் டவர் பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு

அண்ணாநகர்: அண்ணா நகரில் ரூ.97 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட டவர் பூங்காவை அமைச்சர்கள் கே.என். நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். அண்ணா நகர் டவர் பூங்கா, 15.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. சென்னைவாசிகளின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக விளங்கி வருகிறது. இங்கு உள்ள  டவர் 138 அடி உயரம் உடையது. இக்கோபுரம் 1968ம் ஆண்டு முதல் மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. அன்றைய கால கட்டத்தில், இந்த கோபுரத்தின் வாயிலாக, மத்திய சென்னை முழுவதும் பார்க்க முடிந்தது. இந்நிலையில், கோபுரத்தின் மீது காதல் ஜோடிகள் ஏறி தற்கொலை செய்து கொள்வது அதிகரித்ததால், கடந்த 2011ல் கோபுரத்தின் மீது பொதுமக்கள் செல்ல சென்னை மாநகராட்சி  தடை விதித்தது.

இதனையடுத்து, பொது மக்களின் கோரிக்கையை அடுத்து, இந்த கோபுரத்தில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்த மாநகராட்சி திட்டமிட்டது. அதன்படி, ரூ.97 லட்சம் மதிப்பில் டவர் மற்றும் பூங்கா சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளபட்டன. இதற்கான பணிகள் முடிவடைந்த நிலையில், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று இந்த டவர் பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உட்பட அரசு அதிகாரிகள் பலர்  கலந்து கொண்டனர். இதுகுறித்து, பொதுமக்கள் கூறும்போது, ‘‘12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இப்பூங்கா பயன்பாட்டிற்கு வந்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இந்த கோபுரத்தின் மீது, செல்வதற்கு மாநகராட்சி சார்பில் கட்டணம் ஏதும் வசூலிக்க கூடாது. காதல் ஜோடிகள் அத்துமீறலை கண்காணிக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : Anna Nagar Tower Park , Anna Nagar Tower Park renovated at a cost of Rs. 97 lakhs opens for public use
× RELATED ரூ.40 லட்சத்தில் சீரமைக்கப்பட்டுள்ள...