அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் கத்தியுடன் மர்ம கும்பல் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோயம்பேடு மார்க்கெட்டில் இரவு நேரங்களில் கஞ்சா வியாபாரிகள், ரவுடிகள், வழிப்பறி ஆசாமிகள் கடைகளின் மேற்கூரை மீது தங்குவதாக வந்த புகாரின் பேரில், சமீபத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அடையாளம் தெரியாத நபர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். பிடிபட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இதனால், வியாபாரிகள் நிம்மதியடைந்தனர். இந்த நிலையில், தற்போது மர்ம கும்பல் கத்தியுடன் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று முன்தினம் இரவு ஒரு மர்ம கும்பல் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்டதுடன், பயங்கர சத்தத்துடன் அங்குமிங்கும் ஓடினர். இதை பார்த்து அங்கு இருந்த வியாபாரிகள், கூலி தொழிலாளர்கள் மற்றும் பொருட்கள் வாங்க வந்திருந்த பொதுமக்கள் என அனைவரும் பயத்தில் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதன்காரணமாக மார்க்கெட் வளாகம் முழுவதும் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து வந்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘கோயம்பேடு மார்க்கெட்டில் இரவு நேரங்களில் ரவுடிகள், வெளியாட்கள் தங்குவதும், அவர்கள் அடிக்கடி மோதிக்கொள்வதும் தொடர்கதையாக உள்ளது. கடந்த 2 வருடத்துக்கு முன் கோயம்பேடு மார்க்கெட்டில் அரிவாளுடன் நுழைந்த ரவுடி ஒரு டீ கடையில் புகுந்து, கடை உரிமையாளரிடம் மாமூல் கேட்டபோது, அவர் கொடுக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த ரவுடி, கடை உரிமையாளர், கூலி தொழிலாளி உள்ளிட்ட 4 பேரை சரமாரியாக வெட்டினார்.
இதுபோல், நேற்று முன்தினம் இரவு ஒரு மர்ம கும்பல் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் மோதிக்கொண்டது. எனவே, கோயம்பேடு போலீசார் உடனடியாக மார்க்கெட்டில் சோதனை தீவிர சோதனை நடத்தி, வெளியாட்கள் தங்குவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றனர். மார்க்கெட் வளாகத்தில் மர்ம கும்பல் மோதிக்கொண்ட சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.