×

காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் லண்டன் இந்திய தூதரகத்தில் தேசியக்கொடி அவமதிப்பு

லண்டன்: இங்கிலாந்தில் நடந்த காலிஸ்தான் ஆதரவு போராட்டத்தில் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் தேசிய கொடி அவமதிக்கப்பட்டது. காலிஸ்தான் கொடி ஏற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த இங்கிலாந்து அரசு அங்குள்ள இந்திய தூதரகங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளது. சீக்கியர்களுக்கு தனி நாடு கோரி போராடும் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளர் அம்ரித்பால் சிங்கை கைது செய்ய பஞ்சாப் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதுவரை, அவரது ஆதரவாளர்கள் 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்நிலையில், இங்கிலாந்தில் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன் நேற்று திரண்ட காலிஸ்தான் பிரிவினைவாத ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

லண்டனில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி இருந்த இந்திய தூதரகத்துக்கு சென்ற அவர்கள் அம்ரித்பாலுக்கு ஆதரவாக கோஷமிட்டனர். பின்னர், தூதகரத்தின் கொடிக்கம்பத்தில் பறந்து கொண்டிருந்த இந்திய தேசியக்கொடியை கீழே இறக்கி விட்டு, அதற்கு பதிலாக காலிஸ்தான் கொடியை பறக்கவிட்டனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் கிடைத்து அங்கு சென்ற இங்கிலாந்து போலீசார் காலிஸ்தான் ஆதரவாளர்களை விரட்டியடித்தனர். இதில், ஏற்பட்ட மோதலில் இங்கிலாந்து போலீசார் இருவர் காயமடைந்தனர்.

அதன் பின்னர், லண்டன் தூதரகத்தில் இந்திய தேசியக்கொடி மீண்டும் பறக்கவிடப்பட்டது. பிறகு, தூதரக கட்டிடத்தில் மிகப்பெரிய அளவிலான இந்திய தேசியக்கொடி தொங்கவிடப்பட்டது. இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக இந்தியாவுக்கான இங்கிலாந்து துணை தூதரை அழைத்து கடும் கண்டனம் தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இது குறித்து உரிய விளக்கம் அளிக்கும்படி இங்கிலாந்து வெளியுறவுத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதற்கு பதிலளித்து இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் தாரிக் அகமது தனது டிவிட்டரில், ‘’லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.  இந்திய தூதரக பாதுகாப்பில் இங்கிலாந்து அரசு எப்போதும் கண்காணிப்புடன் இருக்கும். இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் அரசு உறுதி அளிக்கிறது,’’ என்று கூறியுள்ளார்.

Tags : Khalistan ,Indian Embassy ,London , Khalistan supporters protest at the Indian Embassy in London and desecrate the national flag
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது