வாலிபர்களிடம் நகை, பணம் பறிப்பு: மர்ம நபர்களை பிடிக்க 4 தனிப்படை

ஊத்துக்கோட்டை: வாலிபர்களிடம் நகை, பணம் வழிப்பறி செய்த மர்ம நபர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடுகின்றனர். சென்னை அருகே நெற்குன்றம் பகுதியில் வசிப்பவர் ராமேஸ்வர்லால்(42). அப்பகுதியில் அடகுகடை வைத்தும் சிறு கடைகளுக்கு சில்லறையாக தங்க வியாபாரமும் செய்கிறார். இந்நிலையில் நேற்று ராமேஸ்வர்லாலிடம் பணியாற்றும் அதே பகுதியை சேர்ந்த காலுராம்(30), சோகன்லால்(28) ஆகியோர் சுமார் 175 சவரன் தங்க நகைகளை பைக்கில் எடுத்துச்சென்றனர். பூந்தமல்லி,  நசரத்பேட்டை, தாமரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் நகைகளை விற்பனை செய்தும் வசூலான பணத்தை  வாங்கிக்கொண்டும், பழைய பாக்கியை வசூல் செய்து கொண்டும், தாமரைப்பாக்கம் பகுதியில் இருந்து செங்குன்றம் நோக்கி பைக்கில் சென்றனர்.

சோகன்லால் பைக்கை ஓட்டிச்செல்ல, பின்னால் அமர்ந்து வந்த காலுராம் 175 சவரன் நகைகள், ரூ..1 லட்சத்து 10 ஆயிரம் வைத்திருந்தார். அப்போது காரணி - மாகரல் இடையில் சென்றபோது பின்னால் 2 பைக்கில் வந்த முகமூடி அணிந்த 4 மர்ம நபர்கள்,  வழிமடக்கி, நகை பணம் வைத்திருந்த காலுராமை கத்தியால் வெட்டினர். இதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. பின்னர் அவரிடமிருந்து 175 சவரன் நகை மற்றும் ரூ..1 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கபணத்தை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனர்.

இதுகுறித்து வெங்கல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. சிபாஸ் கல்யாண் வெங்கல் காவல் நிலையத்தில் இருந்த காலுராமிடம், சோகன்லாலுவிடம் விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க ஊத்துக்கோட்டை டிஎஸ்பி கணேஷ்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் தர்மலிங்கம், வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் 4  தனிப்படைகள் அமைத்து மர்ம நபர்களை தேடுகின்றனர்.

Related Stories: