×

சென்னையை சேர்ந்தவர்கள் உட்பட 80 இளம்பெண்கள் ஆபாச வீடியோ குமரி பாதிரியார் அதிரடி கைது: பரபரப்பு வாக்குமூலம்

நாகர்கோவில்: சென்னையை சேர்ந்தவர்கள் உட்பட 80 இளம்பெண்களுடன் பழகி வாட்ஸ் அப் சாட்டிங் செய்து, ஆபாச வீடியோ எடுத்த குமரி பாதிரியார் கைது செய்யப்பட்டார். குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே சூழால் குடயால்விளையை சேர்ந்தவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ (29). இவர், அழகியமண்டபம் அருகே தேவாலயம் ஒன்றில் பாதிரியாராக இருந்தார். அதற்கு முன், பேச்சிப்பாறை அருகே தேவாலயத்தில் பயிற்சி பாதிரியாராக பணியாற்றினார். இந்த நிலையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ, இளம்பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் மற்றும் போட்டோக்கள், பாலியல் ரீதியான ஆபாச சாட்டிங் போன்றவை சமூக வலை தளங்களில் பரவியது. இதனால் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தலைமறைவானார்.

இந்நிலையில் பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர், பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ பாலியல் ரீதியாக வாட்ஸ் அப் சாட்டிங் செய்து தொல்லை செய்ததாகவும், மிரட்டியதாகவும் புகார் அளித்தார். இதன் பேரில் பாதிரியார் மீது, சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த பாதிரியாரை பிடிக்க ஏ.டி.எஸ்.பி. ராஜேந்திரன் மேற்பார்வையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இவர்கள் பெங்களூரு, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் பாதிரியாரை தேடி வந்தனர். இதற்கிடையே பாதிரியார் லேப்டாப் போலீஸ் வசம் சிக்கியது. இதில் சென்னையை சேர்ந்தவர்கள் உட்பட 80க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் ஆபாச வீடியோக்கள், போட்டோக்கள் இருந்தன. இதை பார்த்து போலீசாரே அதிர்ச்சி அடைந்தனர்.

பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ, நீதிமன்றத்தில் சரண் அடைவார் என்று தகவல் பரவிய நிலையில் நேற்று முன்தினம் இரவு, நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே அவரை தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை நாகர்கோவிலுக்கு அழைத்து வந்தனர். அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து விடிய, விடிய விசாரணை நடந்தது. பின்னர் நேற்று காலை, நாகர்கோவிலில் எஸ்.பி. அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்துக்கு அவரை அழைத்து வந்து போலீசார் பாதிரியாரிடம் வாக்குமூலம் பெற்றனர்.

முதலில் போலீசாரிடம் எதுவும் பேச மறுத்த பாதிரியார், பின்னர் தான் எந்த பெண்ணையும் கட்டாயப்படுத்தி, மிரட்டி சித்ரவதை செய்யவில்லை என தெரிவித்தார். வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தான் வெளியிடவில்லை என்றும் கூறினார். இளம்பெண்களை நிர்வாணமாக வீடியோ பதிவு செய்தது ஏன்? என கேட்ட போது, எந்த பதிலும் கூற வில்லை. சம்பந்தப்பட்ட இளம்பெண்களுக்கு வீடியோ எடுப்பது தெரியுமா? என போலீசார் கேட்ட போது, அவர்களுக்கு தெரியாமல், அவர்கள் விரும்பாமல் எதையும் நான் செய்ததில்லை என கூறி உள்ளார். அவரிடம் பல மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணைக்கு பின், நேற்று மதியம் பலத்த பாதுகாப்புடன் பாதிரியாரை நாகர்கோவில் மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

* லீலைகள் வெளியானது எப்படி?
பாதிரியார் மீது குமரி மாவட்டம் காட்டாத்துறை அருகே உள்ள ஆலந்தட்டு விளையைச் சேர்ந்த மினி அஜிதா (40) என்பவர் தான் முதன்முதலில் புகார் அளித்திருந்தார். இவர் தனது புகாரில் பாதிரியாரின் லீலைகளை குறிப்பிட்டு இருந்தவுடன் தனது மகன், பாதிரியாரை தட்டி கேட்டதால் பொய் புகார் அளித்து சிறையில் அடைத்துள்ளனர். எனவே மகன் மீதான பொய் புகாரை ரத்து செய்து விடுவிக்க வேண்டும். மேலும் பாதிரியார் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அப்போது சில ஆதாரங்களையும் காவல்துறையிடம் தாக்கல் செய்திருந்தார். அதன்படி போலீசார் விசாரணை நடத்திய நிலையில், பாதிரியாரின் ஆபாச வீடியோக்கள் தொடர்ந்து வெளியானது.

* திருமணமான பெண்களுடன் தொடர்பு
பேச்சிப்பாறை அருகே  உள்ள தேவாலயம் ஒன்றில் முதலில் பயிற்சி பாதிரியாராக இருந்தபோதே அவர் இளம்பெண்களிடம் நெருக்கம் காட்ட தொடங்கி உள்ளார். கல்வி, வேலை வாய்ப்பு, திருமணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக பிரார்த்தனைக்கு வரும் இளம்பெண்களுக்கு ஆசி  வழங்கி, பல்வேறு அறிவுரைகளை கூறுவார். ஆங்கிலம், மலையாளம், தமிழ் ஆகிய 3  மொழிகளும் நன்றாக பேசும், பாதிரியார்  பெனடிக்ட் ஆன்றோ, நுனி நாக்கு ஆங்கிலம் மூலம் இளம்பெண்களை எளிதில் கவர்ந்துள்ளார். இவரிடம் பழகி , இவரது  விருப்பப்படி நடந்து கொண்ட இளம்பெண்கள், திருமணமாகி சென்ற பின்னரும்  அவர்களுடன் பாதிரியார் தொடர்பில் இருந்துள்ளார். குறிப்பாக கணவர்  வெளிநாட்டில் இருக்கும் இளம்பெண்களுடன், அதிக நெருக்கமாக இருந்திருக்கிறார். இதையடுத்து, பாதிரியார் பணியாற்றிய தேவாலயங்கள் மற்றும் ஊர்களுக்கு சென்று போலீசார் விசாரித்துள்ளனர்.

* ரகசியம் காக்கப்படும்
போட்டோக்கள், வீடியோக்களில் உள்ள இளம்பெண்கள் யார்? என்பது தொடர்பாக பாதிரியாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சிலரது பெயர்களை பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ கூறி உள்ளார். தற்போது பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளதால், அவரால் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக வந்து புகார் அளிக்கலாம் என்றும், அவர்களின் ரகசியம் காக்கப்படும் என்றும் சைபர் கிரைம் போலீசார் கூறி உள்ளனர்.

* சிம்கார்டுகள் செல்போன்களை மாற்றிய பாதிரியார்
பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தலைமறைவாக இருந்தபோது 3 செல்போன்களை பயன்படுத்தி உள்ளார். 11 சிம்கார்டுகளையும் பயன்படுத்தி இருக்கிறார். இதில் கர்நாடகா, கேரளாவில் வாங்கப்பட்ட சிம்கார்டுகள் தான் அதிகம். போலீசாரை திசை திருப்பும் வகையில் அடிக்கடி சிம்கார்டுகளையும், செல்போன்களையும் மாற்றி உள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

* மேலும் 4 பெண்கள் போலீசில் புகார்
பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மீது தற்போது குமரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார்கள் குவிந்து வருகின்றன. ஏற்கனவே பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த நர்சிங் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் தான் பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் மீது சென்னை, மற்றும் பெங்களூரூவை சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் உட்பட மொத்தம் 4 பேர் புதிதாக புகார் அளித்துள்ளனர். இந்த புகார்களின் அடிப்படையிலும் பாதிரியார் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.


Tags : Chennai , 80 young girls, including those from Chennai, arrested for pornographic video of Kumari priest: Sensational confession
× RELATED 1.5 கிலோ தங்கத்துடன் தப்பிய சிறுவன் கைது