×

சென்னை, தாம்பரம் உள்பட 6 மாநகராட்சிகளில் இலவச வைபை சேவை

சென்னை: தமிழக அரசின் பட்ஜெட்டில் கூறி இருப்பதாவது: மின்னணு முறையில் நேரடியாக, எளிதான, வெளிப்படையான முறையில் அனைத்து சேவைகளையும் மக்களுக்கு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நோக்கத்தை எய்த, ‘Simple Gov’ என்ற ஒரு புது முயற்சியை அரசு தொடங்கும். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பல்வேறு அரசு துறைகளின் நடைமுறைகளையும் சேவைகளையும் கணினிமயமாக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. மென்பொருட்களை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் உரிய தரநிலைகளுடன் உருவாக்குவதற்காக, ரூ.100 கோடி மதிப்பில் ‘மின்-ஆளுகை நிதி’ ஏற்படுத்தப்படும்.

உயர்தர இணைய இணைப்பை ஏற்படுத்தவும், குறைந்த விலையில் பல்வேறு மின் சேவைகளை வழங்கவும், “ஒருங்கிணைந்த மின்னணு கட்டமைப்பு” அரசால் அமைக்கப்படும். இதன்மூலம், மாநில தலைமையகத்தில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் அதிவேக கண்ணாடி இழைக்கற்றை வலையமைப்பு உருவாக்கப்படும். இத்திட்டம் ரூ.400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். இதன்மூலம் இணையவழி மருத்துவம், கல்வி, வேளாண் விரிவாக்க சேவைகள் ஆகியவற்றை மாநிலத்தில் குக்கிராமங்கள் வரை கொண்டு செல்ல முடியும்.

முதற்கட்டமாக சென்னை, தாம்பரம், ஆவடி, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம் மாநகராட்சிகளின் முக்கிய பொது இடங்களில் இலவச வைபை சேவைகள் வழங்கப்படும். உலகளவில் தகவல் தொழில்நுட்ப துறையில் தமிழ்நாட்டை ஒரு முக்கிய மையமாக நிலைநாட்டுவதற்கும், பெருகி வரும் அலுவலக கட்டமைப்பு தேவைகளை நிறைவு செய்வதற்கும், சென்னை, கோயம்புத்தூர் மற்றும் ஓசூரில், “தமிழ்நாடு தொழில்நுட்ப நகரங்களை” இந்த அரசு அமைக்கும். ஈரோடு, திருநெல்வேலி, செங்கல்பட்டில் தலா ஒரு லட்சம் சதுரடி கட்டிட பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும். இதன் மூலம், சுமார் 4,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

Tags : Chennai ,Tambaram , Free Wi-Fi service in 6 Municipal Corporations including Chennai, Tambaram
× RELATED தாம்பரம் அருகே முடிச்சூரில் இருசக்கர...