×

தகுதியில்லாமல், மாற்று முறை மருத்துவத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தகுதியில்லாமல், மாற்று முறை மருத்துவத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர்களுக்கு சுற்றறிக்கை பிறப்பிக்கும்படி தமிழக டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்குபஞ்சர், எலக்ட்ரோபதி, யோகா போன்ற மாற்று முறை மருத்துவம் செய்யும் தங்கள் உரிமையில் தலையிட காவல் துறையினருக்கு தடை விதிக்கக் கோரி மாற்றுமுறை மருத்துவர்கள் செல்வகுமார், சண்முகம் உள்ளிட்ட 61 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில்  கடந்த 2015ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தனர். சமூக மருத்துவ சேவை படிப்பில் டிப்ளமோ படித்து சேவை வழங்கும் தங்களின் பணியிலும், உரிமையிலும் அடிக்கடி காவல் துறையினர் தலையிடுவதாக மனுவில் குற்றம் சாட்டியிருந்தனர்.

தங்களின் மருத்துவ சேவையை அங்கீகரிக்க கோரி அரசுக்கு மனு அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில், மாற்றுமுறை மருத்துவம் செய்ய மனுதாரர்கள் தகுதி பெறவில்லை எனவும், அவர்கள் பெற்றுள்ளதாக கூறப்படும் ஆறுமாத டிப்ளமோ படிப்பு என்பது அங்கீகரிக்கப்பட்டதல்ல எனவும் தெரிவிக்கப்பட்டது. தகுதி பெறாத இவர்கள்  மருத்துவம் செய்ய அனுமதிப்பது என்பது பேராபத்தை ஏற்படுத்தும் எனவும் அரசுத்தரப்பில் விளக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி, நாட்டில் மாற்று முறை மருத்துவ நடைமுறை உள்ள போதிலும், தகுதி பெறாதவர்கள் மாற்று முறை மருத்துவம் செய்ய எந்த உரிமையும் கோரமுடியாது எனவும், ஆறு மாத டிப்ளமோ படிப்பை வழங்கும் அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். மனுதாரர்கள் சட்டப்படி செல்லுபடியாகும் சான்றிதழ்களை பெற்றிருக்கவில்லை, தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவும் செய்யவில்லை என்பதால் மாற்றுமுறை மருத்துவம் செய்ய அவர்களுக்கு உரிமையில்லை எனவும் கூறி அவர்களின் கோரிக்கையை நிராகரித்து  உத்தரவிட்டார்.

மேலும், பதிவு செய்யப்படாத, அங்கீகரிக்கப்படாதவர்கள், மாற்றுமுறை மருத்துவத்தில் ஈடுபட்டிருக்கிறார்களா என அடிக்கடி ஆய்வு செய்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி, அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப தமிழக டிஜிபி-க்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதேபோல மனுதாரர்கள் மாற்று முறை மருத்துவத்தில் ஈடுபடவில்லை என்பதை உறுதி செய்யவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Tags : Chennai High Court ,Tamil Nadu DGB , Madras High Court directs Tamil Nadu DGP to take action against those practicing alternative medicine without qualification
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...