×

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா முதல்வரின் மகள் அமலாக்கத்துறை ஆபீசில் ஆஜர்

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.  டெல்லி மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தை சிபிஐ, அமலாக்கத் துறை விசாரணை நடந்தி வரும் நிலையில், இவ்வழக்கில் தெலங்கானா முதல்வரும் பிஆர்எஸ் கட்சித் தலைவருமான கே.சந்திரசேகர் ராவ் மகள் கவிதா மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவரிடம் சிபிஐ அதிகாரிகள் ஏற்கெனவே விசாரணை நடத்தினர். கடந்த 11ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் கவிதாவிடம் சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து 16ம் தேதி மீண்டும் ஆஜராகுமாறு உத்தரவிட்டனர். ஆனால் கவிதா அன்றைய தினம் ஆஜராகவில்லை. மாறாக அவரது கட்சி பிரதிநிதி ஒருவர் அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைஅதிகாரியிடம் ஒரு கடிதத்தை சமர்ப்பித்தார்.

அதில், ‘டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்ய தடை விதிக்கக் கோரியும் சம்மனை ரத்து செய்யக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன். இம்மனு வரும் 24ம் தேதி விசாரணைக்கு வருகிறது. எனவே, விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது. இதனிடையே, வரும் 20ம் தேதி (இன்று) ஆஜராக வேண்டும் என்று கவிதாவுக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பியது. அதையடுத்து டெல்லில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று காலை கவிதா ஆஜரானார். அவரிடம் மாலை வரை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதற்கிடையே பிஆர்எஸ் கட்சியினர் அமலாக்கத்துறை அலுவலகம் முன் குவிந்திருந்ததால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags : Enforcement Department Office ,Ajar ,Telangana ,Chief Minister , Telangana Chief Minister's daughter appears before Enforcement Directorate in liquor policy corruption case
× RELATED தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவராக மகேஷ்குமார் கவுட் நியமனம்..!!