×

திருச்சியில் கொட்டி தீர்த்த திடீர் ‘கனமழை’ நொச்சியம், மண்ணச்சநல்லுாரில் ஆலங்கட்டி மழை

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் பரவலகா நேற்று மழை பெய்தது. நொச்சியம், மண்ணச்சநல்லுாரியில் நேற்று மாலை ஆலங்கட்டி மழை பெய்தது. தென்கிழக்கு இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளின் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று இணைவதால் 23ம் ேததி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழைபெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி திருச்சியில் நேற்று திடீரென கனமழை பெய்தது. திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக வாட்டி வதைத்தது. இதனால் பகல் நேரங்களிலேயே சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மக்கள் வீட்டில் தஞ்சம் அடையும் நிலைக்கு வெயில் வாட்டியது.

இந்நிலையில் நேற்று காலை முதல் திருச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வானம் வெயில் அடிப்பதும், கருமேகம் சூழ்ந்து மூடுவதுமாக மாறிமாறி காணப்பட்டது. இதையடுத்து மாலை 5.30 மணிக்கு மேல் பலத்த காற்று வீசியது. ஆங்காங்கே மாநகர பகுதியில் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டு வேலை நடைபெற்று வருவதால், சுழன்றடித்த காற்றினால் சாலையெங்கும் புழுதி புயல் வீசியது போன்று காணப்பட்டது. சிறிது நேரம் வீசிய காற்றால் சாலை புழுதியில் சிக்கி மக்கள் சிரமத்துக்குள்ளாயினர்.

காற்றுக்கு பின்னர் திடீரென பெய்யத் துவங்கிய கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளப் பெருக்கெடுத்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது. மழையால் சாலைகளின் பள்ளங்களில் தேங்கிய மழை நீரால் வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் மாநகரின் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினர். திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் மழைதண்ணீர் குளம் போல் தேங்கி காணப்பட்டது. இதனால் பஸ் நிலையத்திற்கு வந்த பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.

இதேபோல் மாவட்டத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. திருச்சி சுற்று வட்டாரப் பகுதிகளான நொச்சியம், மண்ணச்சநல்லுார் ஆகிய பகுதிகளில் திடீரென சில நிமிடங்கள் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் ஐஸ்கட்டி ெபாறுக்கி மகிழ்ச்சியடைந்தனர். இந்த பகுதிகளில் வீசிய பெருங்காற்றால் சில இடங்களில் தென்னை, பனை உள்ளிட்ட மரங்கள் வேறோடு சாய்ந்தன. இருப்பினும் நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த கனமழையால் வெப்பம தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

பழமையான புளிய மரம் விழுந்தது; 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மேலவாளாடி பனையடியான் கோவில் பகுதியில் பலத்த காற்றுடன் நேற்று மழை பெய்தது. அப்போது சாலையோரத்தில் இருந்த பழமையான பெரிய புளிய மரம் திடீரென காற்றில் சாய்ந்து ரோட்டில் விழுந்தது. இதில் மின்கம்பங்களும் அறுந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. திருச்சியில் இருந்து அரியலூர், சிதம்பரம் நோக்கி செல்லும் பஸ்கள், வாகனங்கள் திருச்சியை நோக்கி செல்லும் வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. மேலும் போக்குவரத்து பை பாஸ் சாலையில் இயக்கப்பட்டது. மரத்தை அகற்றும் பணியில் சமயபுரம் போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள், மின் வாரிய ஊழியர்கள் கொட்டும் மழையிலை பொருட்படுத்தாமல் ஈடுபட்டனர். மரம் அகற்றியபிறகு சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.

Tags : Trichy ,Manchanalluar , Sudden 'heavy rain' in Trichy, hailstorm in Manchanalluar
× RELATED திருச்சியில் போலி மது பாட்டில்கள் பறிமுதல்..!!