×

குன்னூரில் பரபரப்பு பிளாஸ்டிக் பாட்டில்கள் எடுத்து வந்த வாகன உரிமையாளர்களுக்கு அபராதம்

குன்னூர்: குன்னூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் எடுத்து வந்த வாகன உரிமையாளர்களுக்கு ரூபாய் 25,000 அபராதம் விதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மற்றும் வன விலங்குகள் பாதிப்பு ஏற்படுகிறது. இதன் பயன்பாட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.  

மாவட்டத்தில் தண்ணீர் பாட்டில், பிளாஸ்டிக் டம்ளர், பாலித்தீன் பைகள் போன்ற பிளாஸ்டிக்கால் ஆன பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி குன்னூரில் உள்ள மார்க்கெட் மற்றும் பேக்கரிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.  மேலும் சுற்றுலா தலங்களில் தடை செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்கள் மறைமுகமாக விற்பனை செய்து வருகின்றனர். மறைமுகமாக விற்பனை செய்வதால் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளதால் அவற்றை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

இதையடுத்து குன்னூர் வருவாய் கோட்டாட்சியர்  பூஷணகுமார் தலைமையில், குன்னூர் வட்டாட்சியர் சிவக்குமார் முன்னிலையில், வாகன சோதனை மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் எடுத்து வந்த வாகன உரிமையாளர்களிடம் ரூபாய் 25,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், கல்லாறு பசுமை வரி சோதனைச்சாவடியில் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் மண்டல துணை வட்டாட்சியர்கள் முனீஸ்வரன், ஸ்ரீனிவாசன் மற்றும் வருவாய்த்துறையினர் வாகன சோதனை மேற்கொண்டு வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags : Kunnur , Coonoor, plastic bottle, vehicle owners, fine
× RELATED தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்...