×

வருசநாடு அருகே மூல வைகை ஆற்றில் பாலம் கட்ட வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

வருசநாடு: வருசநாடு அருகே மூல வைகை ஆற்றில் பாலம் கட்ட வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வருசநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சியில் வண்டியூர் கிராமம் அமைந்துள்ளது. தும்மக்குண்டு கிராமத்தில் இருந்து வண்டியூருக்குச் செல்லும் பாதையின் குறுக்கே மூலவைகை ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்படவில்லை. இதனால் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்படும் நேரங்களில் பொதுமக்கள் ஆற்றை கடக்க முடியாமல் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.

அது போன்ற நாட்களில் பள்ளி மாணவ-மாணவிகள் கயிறு மூலம் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை தொடர்ந்து வருகிறது. இதுதொடர்பாக கிராம பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றியும் தற்போது வரை புதிய பாலம் கட்ட எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையே வண்டியூர் கிராமத்திற்கான சுடுகாடு மூலவகை ஆற்றங்கரையின் மறுபக்கத்தில் அமைந்துள்ளது. எனவே நீர்வரத்து அதிகம் உள்ள நாட்களில் கிராமத்தில் யாரேனும் உயிரிழந்தால் அவர்களின் சடலத்தை ஆற்று நீரில் மிதக்க வைத்து எடுத்து வந்து பின்னர் சுடுகாட்டில் அடக்கம் செய்யும் நிலை உள்ளது.

தும்மக்குண்டு கிராமத்தில் இருந்து வண்டியூருக்கு மற்றொரு சாலை உள்ளது. ஆனால் அந்த சாலையில் சென்றால் 6 கிலோமீட்டர் தொலைவு கூடுதலாக பயணம் செய்ய வேண்டியது உள்ளது. இதனால் வீண் அலைச்சல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வண்டியூர் மலைக் கிராமத்திற்கு செல்லும் பாதையின் குறுக்கே செல்லும் மூலவைகை ஆற்றில் புதிய பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தும்மக்குண்டு ஊராட்சி மன்ற தலைவர் பொன்னழகுசின்னக்காளை கூறுகையில், கடந்த 60 ஆண்டு காலமாக பாலம் வசதி வேண்டி பொதுமக்கள் புகார் கொடுத்துள்ளார்கள்.
இது சம்பந்தமாக பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் தகவல் அளித்துள்ளார்கள். ஆனால் இதுவரையும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பாலம் வசதி இல்லாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Tags : Moola Vaigai river ,Varusanadu , Varusanadu, Moola Vaigai river bridge, public demand
× RELATED வெளிமாநில வரத்து அதிகரிப்பு வருசநாட்டில் தேங்கும் தேங்காய்கள்