சிவகாசி மாநகராட்சியில் உரிய அலுவலர்கள், பணியாளர்கள் நியமித்து மண்டல அலுவலகங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்

சிவகாசி: சிவகாசி மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் உரிய அலுவலர்கள், பணியாளர்கள் நியமித்து முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். சிவகாசி மாநகராட்சியில் 48 வார்டுகளில் 4 மண்டலம் உள்ளது. இந்த 4 மண்டலத்திற்கும் அலுவலகம் திறக்க வேண்டும் என திமுக உள்பட அனைத்து கவுன்சிலர்களும் வலியுறுத்தி வந்தனர்.

கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்று திருத்தங்கல் போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள புதிய திருமண மண்டபத்தில் 1வது மாநகராட்சி மண்டல அலுவலகமும், 2வது மண்டலம் திருத்தங்கல் பழைய நகராட்சி அலுவலகத்திலும், 3வது 4வது மண்டல அலுவலகம் சிவகாசி பழைய நகராட்சி அலுவலகத்திலும் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. மண்டல தலைவர்களாக திமுக கவுன்சிலர்கள் குருசாமி, அழகுமயில், ஏ.சி.சூரியா, சேவுகன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்த அலுவலகங்களுக்கு ‍போதிய பணியாளர்கள் நியமிக்கப்படாமல் பெயளரவில் இயங்கி வருகின்றன.

ஒவ்வொரு மண்டல அலுவலகத்திலும் உதவி கமிஷனர், உதவி பொறியாளர், சுகாதார ஆய்வாளர், வருவாய் ஆய்வாளர், நகர அமைப்பு ஆய்வாளர், வரி வசூல் மையம் மற்றும் அலுவலக பணியாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். இந்த அதிகாரிகளின் கீழ் சுமார் 100 தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் சிவகாசி மாநகராட்சி மண்டல அலுவலங்களில் இதுபோன்ற எந்த அதிகாரிகளும் தனியாக நியமிக்கப்படவில்லை.

ஏற்கனவே இருந்த வரி வசூல் உள்பட சில பணியாளர்களை வைத்து கொண்டு, 2வது மண்டல அலுவலகம் மட்டும் இயங்கி வருகின்றது. தூய்மை பணியாளர்களை வைத்து கொண்டு முதல் மண்டல அலுவலகம் இயங்கி வருகின்றது. மண்டல தலைவர், கவுன்சிலர்கள் மட்டும் அலுவலகம் வந்து செல்கின்றனர். இந்த மண்டலத்துக்கு உட்பட்ட வார்டுகளில் புகார் மற்றும் வரி செலுத்துதல் உள்பட அனைத்து பணிகளுக்கும் 2வது மண்டல அலுவலகத்திற்கு அல்லது மாநகராட்சி அலுவலகம் செல்ல வேண்டும். எனவே, புதிய மண்டல அலுவலகங்களுக்கு அதிகாரிகள், பணியாளர்களை விரைவில் நியமித்து, அலுவலகம் செயல்பட தொடங்கினால் தான், இந்த பகுதிகளில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

அபாய கட்டிடத்தில் மண்டல அலுவலகம்

திருத்தங்கல் 2வது மண்டல அலுவலகம் பழைய நகராட்சி கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் மிகவும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. கட்டிடத்தின் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சுவர் மிகவும் சேதமடைந்துள்ளதால் அருகில் குடியிருப்பு வாசிகள் அச்சத்துடன் வாழ்கின்றனர். இந்த கட்டிடத்தின் பல்வேறு பகுதிகள் இடித்து அகற்றப்பட்ட நிலையில் அலுவலகம் மற்றும் வனிக வளாக கட்டிடங்கள் சேதமடைந்து செயல்பாட்டில் உள்ளது. இந்த கட்டிடத்தை அகற்றி விட்டு மாநகராட்சி மண்டல அலுவலகங்களுக்கு புதிய கட்டிடம் கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநகராட்சிக்கு வருமானம் போச்சு

சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் போலீஸ் ஸ்டேசன் அருகே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூடம் கட்டப்பட்டது. பொதுமக்கள் கல்யாணம், காது குத்து உட்பட பல்வேறு சுப நிகழ்ச்சிகள் குறைந்த கட்டணத்தில் பயன்படுத்தும் வகையில் இந்த கட்டிடம் கட்டி கொடுக்கப்பட்டது. 2 ஆண்டுகளாக இந்த திருமண மண்டபம் திறக்கப்படாமல் தற்போது மாநகராட்சி மண்டல அலுவலகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் திருத்தங்கல் மக்கள் ரூ.50 ஆயிரம், ரூ.ஒரு லட்சம் செல்வு செய்து தனியர் மண்டபங்களை பிடித்து சுபநிகழ்ச்சிகள் நடத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். எனவே இந்த திருமண மண்டபத்தை உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

குறை தீர்க்க சமூக வலைதளங்கள் உருவாக்க வேண்டும்

சிவகாசி மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை சிவகாசி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மேயர், துணை மேயர், ஆணையாளரிடம் நேரடியாக மனுக்களாக கொடுத்து பயன்பெற்று வருகின்றனர். தற்போது சமூக வலைதளங்களின் ஆதிக்கம் அவசிய தேவை என்ற நிலையில் இந்த சமூக வலைதளங்கள் மூலமும் பொதுமக்களின் தேவைகளை அறிந்து மாநகராட்சி நிர்வாகம் நிவர்த்தி செய்ய வேண்டும். மதுரை, நெல்லை மாநகராட்சி போன்று மாநகராட்சி அழைப்பு மையம், வாட்ஸ் அப், முகநூல் ஆகிய தகவல் தொழில்நுட்ப முறையிலும் புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிவகாசி மாநகராட்சி பகுதிகளில் மண்டல அலுவலகங்களை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வந்து வாரந்தோறும் மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடத்த வேண்டும்.

மண்டல அலுவலகங்களுக்கு ரூ.10 கோடியில் புதிய கட்டிடம்

மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, மண்டல அலுவலகங்களில் உதவி கமிஷனர் உட்பட பணியாளர்கள் நியமனத்துக்கு, அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும். ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். மாநகராட்சிக்கு ரூ.10கோடியில் புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் 4 மண்டல அலுவலகத்திற்கும் தலாரூ. 2கோடியே 50 லட்சம் வீதம் 10கோடி மதிப்பீட்டில் புதிய மண்டல அலுவலகம் கட்ட அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் புதிய கட்டிடம் கட்டிக்கொடுக்கப்படும் என்றார்.

Related Stories: