மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.112.23 கோடியில் வடிகால் பணி: தலைமை செயலர் ஆய்வு

சென்னை: சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலத்திற்குட்பட்ட இந்திரா நகர், முதல் அவென்யூவில் வெள்ளத்தடுப்பு நிவாரண நிதியின் கீழ்,ரூ.29.16 லட்சம் மதிப்பீட்டிலும், ஜெர்மன் வங்கி நிதியுதவியுடன் கோவளம் வடிநிலப்பகுதியில் பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட கங்கை தெரு, ராம் நகர் (வடக்கு) மற்றும் ராம் நகர் வடக்கு 4வது தெருவில்ரூ.31.58 கோடி மதிப்பீட்டிலும், ஆலந்தூர் மண்டலத்திற்குட்பட்ட நங்கநல்லூர், 48வது தெருவில்ரூ.7.87 கோடி மதிப்பீட்டிலும் புதிய மழைநீர் வடிகால் நடைபெற்று வருகிறது.

மேலும், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட அண்ணா பிரதான சாலையில்ரூ.24.7 கோடி மதிப்பீட்டிலும், ஆர்யகவுடா சாலையில்ரூ.3.52 கோடி மதிப்பீட்டிலும் புதிய மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது.ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதியில் திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட பல்லவன் சாலையில்ரூ.15.4 கோடி மதிப்பீட்டில், புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு பல்வேறு திட்ட நிதியின் கீழ்ரூ.112.23 கோடி மதிப்பீட்டில் புதிதாக  மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை தமிழ்நாடு தலைமை செயலாளர்  இறையன்பு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பணிகள் அனைத்தையும் காலதாமதமின்றி மேற்கொண்டு பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வரவும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்றி பணிகளை மேற்கொள்ளவும் அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, இணை ஆணையர் ஜி.எஸ்.சமீரன், வட்டார துணை ஆணையாளர்கள் எம்.சிவகுரு பிரபாகரன் (வடக்கு), எஸ்.ஷேக் அப்துல் ரகுமான் (மத்தியம்), எம்.பி.அமித் (தெற்கு), அடையாறு மண்டலக்குழுத் தலைவர் ஆர்.துரைராஜ், தலைமைப் பொறியாளர் (பொது) எஸ்.ராஜேந்திரன், மண்டல அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

* பூங்கா பணிகளை பார்வையிட்டார் சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலம், வேளச்சேரி எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையம் முதல் புழுதிவாக்கம் எம்.ஆர்.டி.எஸ். ரயில் நிலையம் வரை பாலங்களின் கீழ் பகுதியில் சிங்கார சென்னை 2.0 திட்டம் மற்றும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ்ரூ.93 லட்சம் மதிப்பில் செயற்கை நீரூற்று, பசுமை புல்வெளி, செடிகள், நடைபாதை அமைத்தல், மின்விளக்கு வசதி ஏற்படுத்துதல், வண்ண ஓவியங்கள் மற்றும் அழகுபடுத்தும் பணிகள், ஆலந்தூர் மண்டலத்தில் ஆதம்பாக்கம் எம்.ஆர்.டி.எஸ். ரயில் நிலையம் முதல் தில்லை கங்கா நகர் வரை சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்கீழ்ரூ.12 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட அழகுபடுத்தும் பணிகள், இதே சாலையில் பெருங்குடி மண்டலத்தில் புழுதிவாக்கம் எம்.ஆர்.டி.எஸ். ரயில் நிலையம் முதல் ஆதம்பாக்கம் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையம் வரை சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்கீழ்ரூ.43 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட  பசுமையாக்கும் பணிகள், நீரூற்று, நடைபாதை உள்ளிட்ட அழகுபடுத்தும் பணிகளை தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்பு நேற்று ஆய்வு செய்தார்.

Related Stories: