×

மாவட்ட அளவில் நடைபெற்றகுத்துச்சண்டை, நீச்சல் போட்டிகளில் பதக்கங்களை குவிக்கும் மாணவர்கள்: பொன்னேரி அரசு பள்ளி சாதனை

அரசுப் பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அரசுப் பள்ளிகளில் படிப்பது பெருமையாகவும், மதிப்பு மிக்கதாகவும் தற்போது மாறி வருகிறது. காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு கல்வித்துறைக்கு கொடுத்து வரும் முக்கியத்துவம்.  குறிப்பாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தி மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் மூலம் மாணவர்கள் கல்வி, விளையாட்டு, கலை, தனித்திறன் ஆகியவற்றில் சிறந்து விளங்குகின்றனர்.

அதற்கு உதாரணமாக பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளங்குகிறது. இந்த பள்ளி மாணவர்கள் படிப்பில் மட்டுமன்றி விளையாட்டுத் துறையிலும் பங்கேற்று வெற்றிகளை குவித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 1944ம் ஆண்டு 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை செயல்பட்ட இந்த பள்ளி, மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக உயர்நிலைப் பள்ளியாகவும், அதை தொடர்ந்து, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் சுற்றுப் பகுதிகளை சேர்ந்த 1,850 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு,  தலைமை ஆசிரியராக ராமமூர்த்தி என்பவரும், 50 ஆசிரியர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகம் அழகிய இயற்கை சூழலும், சுத்தமான கழிப்பறையும், காற்றோட்டமான வகுப்பறைகளும், நல்ல குடிநீர், சுகாதாரமான சத்துணவு, சிறந்த நூலகம் அனைத்து போட்டிகள் நடத்தக் கூடிய விளையாட்டு மைதானம் உள்ளிட்ட வசதிகளுடன் அமைந்துள்ளது.  இங்கு மாணவர்களுக்கு கல்வி மட்டுமின்றி விளையாட்டு, ஓவியம், பொது அறிவு, கதை, கட்டுரை, யோகாசனம், தியானம் மற்றும் குத்துச்சண்டை, சிலம்பம், சதுரங்கம், சைக்கிள் மற்றும் வினாடி வினா, பாட்டு போட்டி, பேச்சுப்போட்டி பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக மாவட்ட மற்றும் ஒன்றிய அளவில் நடைபெறும் போட்டிகளில் மாணவர்கள் வெற்றிகளை குவித்து வருகின்றனர்.

அதன்படி, காஞ்சிபுரத்தில் நடந்த நீச்சல் போட்டியில் இந்த பள்ளியின் 9ம் வகுப்பு மாணவர்கள் டில்லி கணேஷ், முகேஷ்வரன்,  கோகுல், கைலாஷ், மைதீன் ஆகியோர் மாவட்டத்தில் முதலிடம் பெற்றறனர். இதேபோல், தமிழ்ச்செல்வன் மற்றும் முகேஷ் என்ற மாணவர்கள் சிலம்பம் போட்டியில் மாவட்ட அளவில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளனர். பிளஸ் 2 மாணவன் ரஷீத் மாவட்ட அளவிலான குத்து சண்டை போட்டியில் தங்கம் பதக்கம் பெற்று உள்ளார். பிளஸ் 2 மாணவன் விக்னேஷ் மாநில அளவில் கலைத்துறை நிகழ்ச்சியில் நடந்த டிரம்ஸ் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். இதேபோல், பூவரசன் என்ற மாணவன் செஸ் போட்டியில்  மீஞ்சூர் ஒன்றிய அளவில் முதல் இடம் பெற்றுள்ளார். யோகா போட்டியில் ஒன்றிய  அளவில் பல மாணவர்கள் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளனர்.


* தனித்திறன் பயிற்சி இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமமூர்த்தி கூறுகையில், ‘‘மாணவர்களுக்கு கல்வியுடன், தனித்திறன் மற்றும் விளையாட்டு போட்டிகள் பயிற்றுவிக்கப்படுகிறது. இதன் மூலம் பல மாணவர்கள் விளையாட்டில் சாதித்து வருகின்றனர். இந்த பள்ளியில் படித்த பெரும்பாலான மாணவர்கள்  அரசாங்க உயர் பதவியிலும், அரசு சம்பந்தமான அனைத்து துறைகளிலும் முதன்மை வகுக்கின்றனர். மேலும், நாடகம், திருக்குறள், கல்வி குறித்து விழிப்புணர்வு உள்ளீடுகளில் மாணவர்கள் சிறந்து விளங்குகின்றனர்.  மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில்  மாணவர்களுக்கு உறுதுணையாக இங்குள்ள ஆசிரியர்கள் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஆறுமுகம், முனிரத்தினம், ஜெயராஜ் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உறுதுணையாக பணியாற்றி வருகின்றனர்.



Tags : Ponneri Govt School , Students collecting medals in district level boxing, swimming competitions: Ponneri Govt School achievement
× RELATED சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள...