தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி: நாடாளுமன்ற ஜனநாயகத்தை மோடி காலில் போட்டு மிதிக்கிறார்

சென்னை: தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஆர்.ராஜகோபால் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த மாவட்ட அவைத் தலைவர் மா.வே. மலையராஜா தலைமையில் நூற்றுக்கணக்கானோர் நேற்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் துணை தலைவர்கள் கோபண்ணா, பொன் கிருஷ்ணமூர்த்தி, பொது செயலாளர்கள் சிரஞ்சீவி, பாஸ்கர், பி.வி.தமிழ்செல்வன், எம்.எஸ்.காமராஜ், மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம், சுமதி அன்பரசு, கலைப்பிரிவு மாநில செயலாளர்  ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டி: ராகுல் காந்தியின் இல்லத்தை சுற்றி காவல்துறை நிற்கிறது. அவர் என்ன குற்றம் செய்தார். அவருக்கு பாதுகாப்பு வழங்க நிற்கிறார்களா என்று தெரியவில்லை. அவர்களால் நிற்க மட்டுமே முடியும். வேறு எதுவும் செய்துவிட முடியாது. இங்கிலாந்து கல்லூரிக்கு சென்ற ராகுல் காந்தி ஜனநாயகத்தை பற்றி பேசினார். இந்தியா நாடாளுமன்றத்தில் நடந்தவை குறித்து பேசினார். ஜனநாயகமே தவறு என்று பேசவில்லை. ஜனநாயகத்தை மோடி காலில் போட்டு மிதிக்கிறார். மோடிக்கு எதிராக ஒரு கருத்து சொன்னால் அது இந்தியாவிற்கு எதிராக சொல்லப்பட்ட கருத்து என்று பாஜ சொல்கிறது. ஜனநாயகத்தின் குரல்வளையை பாஜ நெரிக்கிறது.

நாடாளுமன்றத்தில் என்னை பேச விட வேண்டும் என்று தான் ராகுல் கேட்கிறார். ஜனநாயகத்தை பற்றி பேச அனுமதி வழங்க வேண்டும். வரும் மார்ச் 28ல் வைக்கம் நூற்றாண்டை கொண்டாட ஈரோட்டில் இருந்து நடைபயணம் மேற்கொள்ள உள்ளோம். கேரளா மற்றும் தமிழக காங்கிரசின் சார்பில் இந்த நடைபயணம் நடைபெறுகிறது. இதற்காக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. நடைபயணத்தை நான் துவக்கி வைக்க உள்ளேன் என்றார். முன்னதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி ஆனந்தனின் 91வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாநில துணை தலைவர்கள் பொன் கிருஷ்ணமூர்த்தி, எர்னஸ்ட் பால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

Related Stories: