×

கூட்டணி பற்றி பேச எனக்கு அதிகாரமில்லை: அண்ணாமலை பல்டி

சென்னை கிண்டியில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:  தேர்தல் நேரத்தில் மக்களை சந்திக்கும் போது சுத்தமாக இருக்க வேண்டும். இந்த கட்சியால் இப்படி தான் தேர்தலை சந்திக்க முடியும் என்ற நம்பிக்கையை தர வேண்டும். பாஜ தலைவராக 2 ஆண்டுகள் இருந்தும், பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் பயணித்தும் உள்ளேன். அரசியல் களத்தில் மிகப்பெரிய மாற்றத்துக்கு தமிழக மக்கள் காத்து இருக்கிறார்கள். நேர்மையான ஓட்டுக்கு பணம் தராத அரசியலுக்கு காத்து இருக்கிறார்கள். கட்சியுடன் கூட்டணி குறித்து பேச கூடிய ஆள் நான் கிடையாது. கூட்டணி பற்றி பேசுகின்ற அதிகாரமும் எனக்கு இல்லை. அதற்கான நேரம் வரும் போது கண்டிப்பாக பேசுவேன். இந்த நிலைப்பாட்டிலும் அரசியல் மாற்றத்தில் தான் என்னை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். 2 ஆண்டு அரசியலை பார்த்து விட்டு முடிவுக்கு வந்து இருக்கிறேன்.

கூட்டணி பற்றி நேரம் வரும் போது தலைவர்கள் சொல்வார்கள். எந்த கட்சிக்கும் தலைவருக்கும் எதிரி கிடையாது. கூட்டணி குறித்து அறிவிக்க எனக்கு அதிகாரம் இல்லை. 9 ஆண்டுகள் நான் சம்பாதித்த பணம் அரவக்குறிச்சி தேர்தலில் போய்விட்டது. குருவி போல் சிறுக சிறுக சேர்த்த பணம் செலவாகிவிட்டது. தேர்தல் முடிந்த பின் கடனாளியாக உள்ளேன். நாடாளுமன்ற தேர்தலில் 80 கோடியில் இருந்து 120 கோடி வரை செலவு செய்ய வேண்டும். இப்படி செலவு செய்து விட்டு சுத்தமான அரசியல், மாற்று அரசியல் செய்ய போவதாக பேசமுடியாது. தமிழகத்தில் பா.ஜ.சார்பில் போட்டியிடுபவர் ஒட்டுக்கு பணம் தர மாட்டார் என்ற நம்பிக்கையை தந்தால் அதற்கான வாக்கு வங்கியும் உள்ளது.

அரசியலில் இந்த பாதையில் பயணிக்க வேண்டும் என்ற முடிவை எடுத்து உள்ளேன். இதை மாற்றி தான் இருக்க வேண்டும் என்றால் அப்படிப்பட்ட அரசியல் தேவை இல்லை என்ற முடிவுக்கும் வந்து உள்ளேன்.  அரசியல் மாற வேண்டும் அதற்கு அச்சாரமாக 2024 தேர்தல் இருக்க வேண்டும். இந்த கருத்துகள் குறித்து தலைமையிடம் காலம் நேரம் வரும்போது பேசுவோம். மாநில தலைவராக இருப்பதால் தனிப்பட்ட கருத்து என சொல்ல முடியாது. தலைவராக என்னால் என்ன செய்ய முடியும் என்ன செய்ய முடியாது என்ற மன பக்குவத்திற்கு வந்து விட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

* அரவக்குறிச்சி தேர்தலின் போது, தேர்தல் ஆணையத்திற்கு அண்ணாமலை சமர்ப்பித்த வரவு மற்றும் செலவு கணக்கு விவரம்.
ரபேல் வாட்ச் விவகாரத்தையடுத்து தனது அரவக்குறிச்சி சட்டப்பேரவை தேர்தல் கணக்கில் பாஜ தலைவர் அண்ணாமலை பொய் கூறியதாக சமூக வலைதளத்தில் செய்தி பரவி வருகிறது. சென்னையில் நேற்று அண்ணாமலை அளித்த பேட்டியில், அரவக்குறிச்சி தேர்தலில் போட்டியிட்டதன் காரணமாக தனது ஐபிஎஸ் பணிக்காலத்தில் சிறுக சிறுக சம்பாதித்த பணத்தை இழந்து தற்போது கடனாளியாக இருப்பதாக மிகுந்த உருக்கமாக கூறியிருந்தார். 9 வருட பணிக்காலத்தில் (108 மாதம்* மாதம்‌ 1 லட்சம்) அவரது சம்பளம் தோராயமாக ஒரு கோடி ரூபாய்.

அதில் ரூ.19.5 லட்சம் மட்டுமே செலவு செய்து விட்டு எப்படி கடனாளியாக ஆனார்? அதுமட்டுமல்ல தேர்தல் கணக்கு சமர்ப்பித்ததில் கட்சி சார்பில் 15 லட்சம் ரூபாயும், நன்கொடைகள் வாயிலாக ரூ.25 லட்சம் பெற்றுள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். இந்த 40 லட்சத்தில் இருந்து, அவர் செலவழித்ததாக கூறும 19 லட்சத்து 50 ஆயிரத்து 371 ரூபாயை கழித்தால், மிச்சமே 20 லட்சத்து 49 ஆயிரத்து 629 ரூபாய் உள்ளது. அப்புறம் எப்படி அவர் கடனாளியாக முடியும். தேர்தல் ஆணையத்திற்கு பொய்கணக்கை சமர்ப்பித்தாரா அண்ணாமலை என‌ மக்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.

Tags : Annamalai Baldi , I have no authority to talk about alliance: Annamalai Baldi
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...