×

அண்ணாமலையின் பாஜ தலைவர் பதவி பறிப்பா?..பரபரப்பு தகவல்கள்

சென்னை: தமிழக பாஜ தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதில் இருந்து, இன்று வரை அவர் ஒரே நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.  அதாவது, முன் கோபக்காரராகவும், எதையும் யோசித்து நிதான அரசியல் சூழலை  கையாளுவது இல்லை. இவர் அதிரடி அரசியலை கையில் எடுத்து,  கூட்டணி கட்சி என்று கூட பார்க்காமல் அதிமுகவினரை பாஜவில் சேர்ப்பது முதல் முன்னாள் ரவுடிகளை சேர்ப்பது வரை அதிரடித்து வந்தார். மேலும், மூத்த தலைவர்களை ஓரங்கட்டி தனக்கு என்று பாஜவில் ஒரு குழுவை வைத்து கொண்டு அதிரடி அரசியல் செய்துவந்தார். அதையும் அவர் மாற்றிக் கொள்ளவில்லை. இதனால், அவருக்கு எதிராக தமிழகத்தில் பாஜவின் எல்லா தலைவர்களும் ஒன்று சேர்ந்தனர். அண்ணாமலை வழக்கத்தை விட கூட்டத்தை அதிகமாக காட்டியதால் மோடியும், அமித்ஷாவும் அவரை நம்பி விட்டதாக கூறப்படுகிறது.  

இதனால், அண்ணாமலை மீது சொன்ன எந்த குற்றச்சாட்டும் எடுபடவில்லை. பாஜவின் பி.எல்.சந்தோஷ்,  சிடி ரவி ஆகியோரும் அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்தனர். பி.எல்.சந்தோஷ் தான் ஆர்.எஸ்.எஸில் முக்கிய பிரமுகர். அவர் முடிவெடுக்க முடியாமல் திணறுகிறார். பாஜவுக்கு ஓட்டு போடாதவர்களையும், பணத்தை செலவழித்து தான், அண்ணாமலை பங்கேற்கும் கூட்டத்துக்கு மக்கள் அழைத்து வரப்பட்டனர். இப்படி கூலிக்காக வருபவர்கள் பாஜவுக்கு ஆதரவாக ஓட்டு போடுபவர்களாக இருக்க மாட்டார்கள். இந்த தகவல் டெல்லி மேலிடத்துக்கு தெரியாமல் இருந்து வந்தது. இதை வைத்து, இந்த கூட்டம் தனக்காக வந்தது என்று அண்ணாமலை பேச தொடங்கினார்.

தான் ஜெயலலிதா, கலைஞர் மாதிரி ஒரு அசைக்க முடியாத தலைவர் என்பதுபோல பேட்டியும் அண்ணாமலை கொடுத்து வந்தார். இதுபோன்ற பேட்டியால் மற்ற கட்சி தலைவர்களும், பாஜ தொண்டர்களுமே அதிர்ச்சியடைந்தனர். இதற்கிடையில் தான் ஈரோடு இடைத்தேர்தல் பிரச்னை வந்தது. கொங்கு மண்டலத்தில் யாருக்கு செல்வாக்கு அதிகம், யார் பெரிய தலைவர் என்பதில் எடப்பாடிக்கும், அண்ணாமலைக்கும் போட்டி ஏற்பட்டது. இரண்டு ேபரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். ஒரே பகுதியில் இருப்பவர்கள்  என்பதால் இரண்டு பேருக்கும் இடையே, ஈகோ எப்போதும் ஓடிக்கொண்டிருந்தது.

ஈரோடு இடைத்தேர்தலில், 15 நாட்கள் வரை ஆதரவு தெரிவிக்காமல் அலைய விட்டார். இதனால்,  எடப்பாடி  அண்ணாமலை மீது கடுப்பானார். ஈரோடு கிழக்கில் 40,000 சிறுபான்மையினர் ஓட்டு பாஜவிடம் சேர்ந்ததால் வராமல் போய் விட்டது என்றும் எடப்பாடி அதிருப்தியில் இருந்தார். இதனால், அண்ணாமலைக்கு ஒரு டிரிட்மென்ட் கொடுக்க வேண்டும் என்று நினைத்து, பாஜ நிர்வாகிகளை எடப்பாடி தன் பக்கம் இழுக்க ஆரம்பித்திருக்கிறார். இதனால், அண்ணாமலை கடும் கோபம் அடைந்தார். அந்த கோபத்தில் தான், நானும் அதிமுகவை உடைப்பேன் என்று சவால்விட்டார். அது முடியவில்லை.

இதனால் டெல்லி மேலிடத்தில் தனக்கு ஏற்பட்ட ெகட்ட பெயரை நீக்க படாதபாடு பட்டு வருகிறார் அண்ணாமலை. அதனால், அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என்ற முடிவுக்கு வந்தார். தமிழகத்தை பொறுத்தவரை கூட்டணி இல்லாமல் 3வது அணி அமைத்து பார்க்கலாம் என்ற எண்ணம் அவருக்கு இருக்கிறது. இது தொடர்பாக அவர் ஆய்வு மேற்கொண்டார். 2014ல் மக்களவை தேர்தலில்  திமுக, அதிமுக தவிர 3வது அணி போட்டியிட்டது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் 3வது அணி இருந்தது. அந்த அணியில் தேமுதிக 14 இடங்கள், பாமக 8, பாஜ 7, மதிமுக 7. இது போக ஏ.சி.சண்முகம், ஈஸ்வரன், பாரிவேந்தர் தலா ஒரு தொகுதி பாஜ சின்னத்தில் போட்டியிட்டது. இதில் 3வது அணி 2 தொகுதியில் வெற்றி பெற்றது. தர்மபுரியில் அன்புமணி, கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணனும் வெற்றி பெற்றனர். 3வது அணி 18 சதவீதம் ஓட்டுக்களை வாங்கியது.

இப்போதும் அதே மாதிரி ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர் பாஜ கூட்டணியில் உள்ளனர். குறிப்பாக புதிய தமிழகம் தற்போது இணைந்துள்ளது. இவர்களையும் தேமுதிகவையும் வைத்து திரும்பவும் ஒரு 3வது அணி அமைத்து, 18 சதவீதம் ஓட்டு வாங்கினால் போதும். குறிப்பாக 5 சீட் வெற்றி பெற்றாலே போதும். சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவை விட அதிகமாக ஓட்டு வாங்கி விடலாம். கொங்கு மண்டலத்தில் பாஜவின் பலம் அதிகமாக இருக்கிறது. அதிமுகவுக்கு பலம் என்பது இல்லை என்று ஒரு திட்டத்தை அண்ணாமலை ரெடி செய்தார். இதனை டெல்லி மேலிடத்திற்கும் அண்ணாமலை கொடுத்துள்ளார். திராவிட கட்சிகள் வேண்டாம்.

தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுக பலமாக உள்ளது. அதே நேரத்தில் அதிமுக எடப்பாடி தலைமையில் எட்டு தோல்விகளை சந்தித்துள்ளது. அதனால், தனித்து போட்டியிட்டால் 2வது இடத்திற்கு வந்து விடலாம். அப்பவே ஜெயலலிதா, கலைஞர் இருக்கும் போது 18 சதவீதம் ஓட்டுக்களை பிடித்தோம். இப்போது மு.க.ஸ்டாலின் மட்டும் தான் பெரிய தலைவராக இருக்கிறார். அவரை தவிர தமிழகத்தில் வேறு பெரிய தலைவர் இல்லை. அதனால் 2வது தலைவராக தாம் உருவாகி விடலாம். பாஜவையும் 2வது பெரிய கட்சியாக கொண்டு வந்து விடலாம் என்று திட்டத்தை தயாரித்து மேலிடத்திடம் அண்ணாமலை கொடுத்துள்ளார். மேலிட தலைவர்கள் இதுவரையில் பதில் சொல்லவில்லை. இந்த கோபத்தில் தான் பாஜ தனித்து போட்டி என்று அண்ணாமலை அறிவித்தார்.

தனித்து போட்டியிட அனுமதிக்கவில்லை என்றால் தலைவர் பதவியில் இருந்து விலக தயார் என்று மோடியையும், அமித்ஷாவுக்கும் மிரட்டல் கொடுக்கும் வகையில் அந்த பேச்சு இருந்தது.  
தேசிய தலைமை எடுக்கும் ஆதரவு என்கிற நிலையில் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், பொன்ராதாகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர். அண்ணாமலை எடுக்கும் முடிவு சரி என்று சக்ரவர்த்தி, கருநாகராஜன், அமர் பிரசாத் ரெட்டி, புதிதாக கட்சியில் இணைந்த இளைஞர்கள் அணியினர் ஒரு அணியாக பிரிந்துள்ளனர். 2 ேபருக்கும் இடையே ஈகோ யுத்தம் கடுமையாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அமர்பிரசாத் ரெட்டி அண்ணாமலைக்கு ஆதரவாக ஸ்டேட்மென்ட் விடுத்தார்.  இதையடுத்து அண்ணாமலைக்கு ஆதரவாக பெரம்பூர் உள்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்ட ஆரம்பித்து விட்டனர்.

அந்த போஸ்டரில், ‘டயர் நக்கியும் வேண்டாம்(டயரை தொட்டு கும்பிட்ட ஓபிஎஸ்), தரை நக்கியும் வேண்டாம்(எடப்பாடி ஊர்ந்து சென்று சசிகலா காலில் விழுந்ததை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளனர்). வா தலைவா வா. தலைமை ஏற்க வா. தமிழகம் காக்க வா...’’ என்று போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டது. இதற்கு பாஜ பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் பதில் கொடுத்தார். மேலும், இது போன்று செயல்களில் ஈடுபட்டால் தேசிய தலைவரிடம் புகார் அளிக்கவும் தயங்க மாட்டேன் என்றும் எச்சரித்து இருந்தார். இதற்கும் அமர்பிரசாத் பதில் கொடுத்துள்ளார். இதனால், பாஜ 2 ஆக பிரிந்து மோதும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இது எல்லாவற்றையும் மத்திய உளவுத்துறையும், ஆர்எஸ்எஸ் பிரமுகரான கேசவ விநாயகமும் பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் நீண்ட அறிக்கையாக அனுப்பி உள்ளார்.

இதற்கிடையில் 27ம் தேதி பிரதமர் தமிழகம் வர உள்ளார். அதற்கு முன்னாடி பிரச்னையை சரி செய்வதற்காக அண்ணாமலை 26ம் தேதி டெல்லி செல்கிறார். அமித்ஷா அப்பாயின்மென்ட் கொடுத்துள்ளார். அன்று அண்ணாமலையை கட்சி மேலிடம் கடுமையாக எச்சரிக்கும் என்று தெரிகிறது. ஏனென்றால் நேரடியாகவே மோடிக்கு சவால் விடும் வகையில் அண்ணாமலை பேசியுள்ளார். இது தொடர்பாக தலைவர்களும் புகார் தெரிவித்துள்ளனர். அதற்கு அப்புறமும் அவர் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாநிலத்தில் கட்சி நிலைமை என்பது கேள்விக்குறியாகி விடும். இதனால் கட்சிப்பதவி பறிக்கப்படுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் மேலிடம் கட்சி பதவியை பறித்தால் தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் அண்ணாமலையை வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

Tags : Annamalai ,BJP , Annamalai's post of BJP president will be taken away?
× RELATED உயிரே போனாலும் நீட் ரத்து செய்ய மாட்டோம்: அண்ணாமலை திமிர்