×

‘குற்றம் செய்தால்.. இனி ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது..’ ரவுடிகளை உளவு பார்க்க ரூ.32.60 லட்சத்தில் பருந்து செயலி: சென்னை காவல்துறையில் விரைவில் 5 புதிய திட்டங்கள் அறிமுகம்

சென்னை: கொலை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகளை உளவுப்பார்த்து நடவடிக்கை எடுக்கும் வகையில் ரூ.32.60 லட்சம் செலவில் ‘பருந்து செயலி’ என்ற புதிய திட்டத்தை சென்னை மாநகர காவல்துறை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த திட்டம் அமலுக்கு வந்தால் இனி ரவுடிகள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாடு காவல்துறையை நவீனமயமாக்கும் வகையில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது.  

அதேநேரம், பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை என்று தேசிய குற்ற ஆவண காப்பகமும் அறிவித்துள்ளது. அதை மேலும் உறுதி செய்யும் வகையில், மாநகர காவல்துறை பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலின் தொலை நோக்கு திட்டத்தின் கீழ் ‘பருந்து செயலி’ என 5 புதிய திட்டங்கள் விரைவில் மாநகர காவல்துறையில் அறிமுகமாகிறது.

5 புதிய திட்ட விபரங்கள் பின் வருமாறு:
* சென்னையில் கொலை, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகள் மற்றும் தாதாக்களை முற்றிலும் கட்டுப்பத்தும் வகையில் ரூ.32.60 லட்சம் செலவில் ‘பருந்து செயலி’ திட்டம் தொடங்கப்படும். இதன் மூலம் ஏ மற்றும் ஏ- பிளஸ், பி மற்றும் பி- பிளஸ் உள்ளிட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகள், அவர்களுடன் இருப்பவர்களின் தகவல்கள் சேகரிக்கப்படும்.

மேலும், குற்றவாளிகளின் வழக்குகள் விபரங்கள், தற்போதைய குற்றங்களின் விபரங்கள், மொபைல் செயலி மூலம் குற்றவாளிகளின் சிறை நிலையை போலீசார் அறியலாம். இமெயில், எஸ்எம்எஸ் மூலம் உடனடி தகவல் பரிமாற்றத்துக்கும் பயன்படும். பழைய குற்றவாளிகளின் படங்கள் செயலியில் பதிவேற்றப்பட்டு, அவர்கள் வெளியில் நடமாடினால் அதிநவீன கேமராக்கள் மூலம் அவர்களை எளிதில் அடையாளம் காணலாம். இதனால், குற்றவாளிகளின் நடமாட்டம் பெரிய அளவில் குறைய உதவும்.   

* சென்னையில், 5 ஆண்டுகளில் சராசரியாக 1,420 வாகனங்கள் திருடப்பட்டுள்ளது. அதில் 80%  வாகனங்கள் இருசக்கர வாகன. மற்றவை ஆட்டோ, கார்கள். இந்த வாகனங்கள் குற்றவாளிகளால் பயன்படுத்தப்படுகிறது. சில நேரங்களில் இந்த வாகனங்கள் உதிரி பாகங்களாக பிரிக்கப்பட்டு கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே, வாகன திருட்ைட தடுக்க ரூ.1.81 கோடியில்  ‘IVMR’ என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குற்றவாளிகளின் தகவல், திருடுபோன வாகன தகவல்களை சேகரித்து அதை இணையம் மற்றும் செல்போனில் இயக்கும் ஒருங்கிணைந்த வாகன கண்காணிப்பு அமைப்பு மூலம் குற்றவாளிகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

* மாநகர காவல் துறையில் ஆண்டுக்கு சராசரியாக 12 ஆயிரத்து 835 இணைய வழி குற்ற சம்பவங்கள் தொடர்பாக புகார்கள் பெறப்படுகின்றன. எனவே இணையவழி குற்ற எச்சரிக்கை செயலி உருவாக்கப்பட உள்ளது. இதற்கு ரூ.29.97 லட்சம் செலவில் ‘இணையவழி குற்ற எச்சரிக்கை செயலி’ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் தொலைபேசி எண்கள், வங்கி கணக்குகள், யு.பி.ஐ., ஐ.டி.கள், சமூக ஊடக கணக்குகள், மின்னஞ்சல் ஐ.டி.கள், வாலட் ஐ.டி.கள் மற்றும் இணையதள யு.ஆர்.எல்.கள் போன்ற மோசடி செய்பவர்களின் விவரங்கள் தரவுத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு குற்றவாளிகளின் செயல் முறை பதிவு அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

* சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் 6.51 விழுக்காடு வாகனங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சென்னையில் உள்ள 312 போக்குவரத்து சிக்னல்களில் தினமும் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சிக்னல்களை கண்டறிந்து, சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரியின் செல்போன் மூலம் தெரிவிக்கும் வகையில் ரூ.1.02 கோடி செலவில் ‘நேரடி போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பு’ தொடங்கப்பட உள்ளது.

* மாநகர காவல்துறையின் முக்கிய மைல்கல்லாக அடையார் பெசன்ட் அவென்யூவில் ‘வானேவி காவல் அலகு’ என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக 6 விரைவு நடவடிக்கை கண்காணிப்பு டிரோன்கள், 1 ஹெவி லிப்ட் மல்டி டிரோன், 2 லாங் ரேஞ்ச் சர்வே விங் டிரோன் என 9 டிரோன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த அதி நவீன டிரோன்கள் 5 முதல் 10 கிலோ மீட்டர் தொலை வரை இயக்க முடியும்.

டிரோன்களில் ஏ.என்.பி.ஆர். கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளதால், பழைய குற்றவாளிகள் நடமாட்டம் மற்றும் கூட்டம் நெரிசலில் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் பழைய குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்க உதவியாக இருக்கும். அதேபோல், கடல் அலைகளில் சிக்கியவர்களை அடையாளம் கண்டு மீட்கவும் இந்த டிரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த 5 புதிய திட்டங்களை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்க உள்ளதாக உயர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : Roudees ,Chennai police , 'If you commit a crime.. you can't run anymore.. you can't hide..' Hawk app at Rs 32.60 lakh to spy on raiders: Chennai Police will soon introduce 5 new programs
× RELATED மயிலாடுதுறையில் மணிக்கூண்டு...