சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல்

சென்னை: தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதி ஆண்டிற்கான பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட்டை சட்டப்பேரவையில் இன்று காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு அரசு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள பெண்களுக்கு மாத1000 வழங்குவது, நீட் தேர்வு ரத்து, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம், மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை, முதியோர் ஓய்வூதியம் ரூ.1500, கல்வித்துறை மீண்டும் மாநிலப்பட்டியலுக்கு கொண்டுவருதல் ஆகியவை குறித்தும், முதல்வரின் காலை உணவுத்திட்டம் விரிவுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த பட்ஜெட் தொடர்பாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2 மணி நேரத்திற்கும் மேல் உரையாற்றுவார். அதன் பின்னர், சட்டபேரவை நிகழ்ச்சிகள் முடிவடையும். இதன் பிறகு சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம்  நடைபெறுகிறது. இதில், ஆளும் கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியினர்  பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம்  எத்தனை நாட்கள் நடத்துவது என்பன குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன.  இன்றைய பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதும், நாளை 2023-24ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை  அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார்.  

இதனை தொடர்ந்து 4 நாட்கள் பேரவை கூட்டம் நடக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.  மேலும், தமிழக ஆளுநர் 4 மாதங்களுக்கும் மேலாக ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் கடந்த 8ம் தேதி திருப்பி அனுப்பினார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 9ம் தேதி நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதன்படி இந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை பேரவையில் நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அந்தவகையில், 2வது முறையாக சட்ட முன்வடிவை ஆளுநருக்கு அனுப்பும் போது அவரால் நிராகரிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

* இளங்கோவனுக்கு இருக்கை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு சட்டப்பேரவையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் மூலமாக அவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து அவையில் எடுத்துரைப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

* இபிஎஸ்-ஒபிஎஸ் இருக்கை விவகாரம்

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையேயான இருக்கை விவகாரம் ஓயாத ஒன்றாக உள்ளது. ஏற்கனவே, இருக்கை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் சபாநாயகரிடம் கடிதம் மூலமும், நேரடியாகவும் பல்வேறு முறை கோரிக்கை வைக்கப்பட்டு அதற்கான விளக்கத்தையும் சபாநாயகர் தரப்பில் தெரிவிக்கப்படாலும், சட்டப்பேரவை கூடும்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் இவை தொடர் கதையாக பின் தொடர்ந்து வருகிறது. அந்தவகையில், இன்றைய கூட்டத்தில் இருக்கை இடம் மாற்றப்படுமா அல்லது அதே இடத்தில் தான் இருவரும் அமர்வார்களான என கூட்டம் தொடங்கும் போதுதான் தெரியவரும்.

Related Stories: